×

சிவகாசி தெய்வானை நகரில் அடிப்படை வசதியின்றி அவதிப்படும் பொதுமக்கள்

சிவகாசி, செப்.10: சிவகாசி நகராட்சி தெய்வானை நகரில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் அச்சகங்கள், பாலித்தீன் கம்பெனி, பட்டாசு கடை, கட்டிங், லேமினேசன் கம்பெனிகளும் அதிகமாக உள்ளன. தெய்வானை நகரில் காந்தி ரோட்டில் உள்ள இடங்களுக்கு மட்டும் நகராட்சி வரைபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.நகரின் மைய பகுதியை ஓட்டி தெய்வானை நகர் அமைந்துள்ளதால் இப்பகுதி வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால், நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த பகுதியில் போதிய அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை. தெய்வானை நகர் காந்தி ரோட்டில் சாலை வசதி இல்லை. இதனால், மழை காலங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், மக்கள் அவதிப்படுகின்றனர். விஸ்வநத்தம் ரோட்டில் உள்ள வீடுகளுக்கு வாறுகால் வசதி செய்து தரப்படவில்லை. ஏற்கனவே கட்டப்பட்ட வாறுகால் பணி தரமாக நடைபெறாததால் வாறுகால் சேதமடைந்து கழிவுநீர் செல்ல வழியின்றி வீடுகளுக்கு அருகிலேயே தேங்கி நிற்கிறது. இதனால், சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும் ஆபத்து உள்ளது.நகராட்சி பகுதியில் இருந்து வரும் மழைநீர் தெய்வானை நகர் கிருதுமால் ஓடை வழியாக சென்று மீனம்பட்டி கண்மாயை அடைகிறது. கிருதுமால் ஓடையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தரமின்றி நடைபெற்றதால் சுவர் இடிந்து ஓடையில் விழுந்து கிடக்கிறது. தெய்வானை நகர் நுழைவு பகுதியில் உள்ள காந்தி ரோட்டில் கிருதுமால் ஓடைக்கு மேலே பாலத்தின் தடுப்புச்சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. இந்த பாலம் வழியாக செல்லும் கனரக வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே செல்கின்றனர்.எனவே, தெய்வானை நகரில் அடிப்படை வசதி செய்து தரவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Civilians ,facilities ,Sivakasi Devanai ,
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை