×

மாணவர் சேர்க்கை இல்லையென்று மூடல் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் பசுமலைத்தேரி கிராமமக்கள் மனு

தேனி, செப். 10: வருசநாடு அருகே பசுமலைத்தேரி கிராமத்தில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஆரம்பப் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என கிராம மக்கள் தேனி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தேனி மாவட்டம், வருசநாடு அருகே பசுமலைத்தேரி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடமலைக்குண்டு-மயிலாடும் பாறை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி உள்ளது. தற்போது இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை இல்லையெனக் காரணம் காட்டி பள்ளியை மூடிவிட்டனர். இதனால் இக்கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் வேறு கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இக்கிராமத்தை சேர்ந்த செந்தமிழன் என்பவர் தலைமையில் கிராமத்தினர் நேற்று தேனி கலெக்டர் அலுவலகம் வந்து கோரிக்கை மனுவை கலெக்டர் பல்லவிபல்தேவிடம் அளித்தனர்.

 இம்மனுவில் கூறியிருப்பதாவது: பசுமலைத்தேரி கிராமத்தில் பலஆண்டுகளாக ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி இயங்கி வந்தது. இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக தெய்வேந்திரபுரம் ஆரம்பப்பள்ளியில் இருந்து புகழேந்தி என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் முறையாக பள்ளிக்கு வரவில்லை. பள்ளிக்கு மாணவர் சேர்க்கைக்கு வரும் மாணவ, மாணவியர்களை வேறு பள்ளியில் சேர வலியுறுத்தியதால் பள்ளியில் மாணவர் சிறிதுசிறிதாக குறைந்து விட்டது.
மாணவர் சேர்க்கை இல்லையென்ற காரணம் காட்டி பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டு விட்டது. இதனால் எங்கள் கிராமத்தை சேர்ந்த குழந்தைகளை வேறு கிராமத்திற்கு பள்ளிக்கு அனுப்ப முடியாமல் பள்ளியை விட்டு நிறுத்தும் நிலை ஏற்பட்டு விட்டது. எனவே, மூடப்பட்ட இப்பள்ளியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Pasumalaitheri ,school ,
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி