×

நீண்ட இழுபறிக்கு பின்பு கம்பம் ஜிஹெச்சில் ரத்த வங்கி தொடக்கம்

கம்பம் செப்.10: கம்பம் அரசு மருத்துவமனையில் நீண்ட இழுபறிக்கு பின்பு ரத்த வங்கி தொடங்கப்பட்டது. கம்பம் அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி தொடங்குவதற்காக ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் குளிர்சாதன அறைகள், லேப் பொருட்கள் தயாராக இருந்தும் லேப் டெக்னீசியன்கள் இல்லாததால் ரத்த வங்கி செயல்படவில்லை. இது குறித்து தினகரன் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று ரத்த வங்கி தொடங்கப்பட்டது. கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் திறந்து வைத்தார். தேனி மாவட்ட சுகாதார இணை இயக்குனர் சரஸ்வதி முன்னிலை வகித்து குத்துவிளக்கேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தேனி மாவட்ட சுகாதார இணை இயக்குனர் மருத்துவர் சையது சுல்தான் இப்ராஹிம், கம்பம் அரசு மருத்துவமனையின் முன்னாள் மருத்துவ அதிகாரி மணி மோகன் மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மாவட்ட ரத்த பரிமாற்ற அலுவலர் மருத்துவர் மணிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். கம்பம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பொன்னரசன் கலந்து கொண்டு பேசும்போது, உலகில் சிறந்த தானம் ரத்த தானம். ரத்த தானத்தால் விலை மதிக்க முடியாத உயிர்கள் காப்பாற்றப்படுகிறது. தற்சமயம் பொதுமக்களுக்கு ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.

தலைமை செவிலியர் ஜோஸ்பின் ஜென்னி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் பெரியகுளம் அரசு ரத்த வங்கியின் செவிலியர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக, திறப்பு விழா நிகழ்ச்சி காலை 10 மணிக்கு தொடங்குவதாக அரசு மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் காலை 11.40க்கு தான் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்தார். நிகழ்ச்சி தொடங்கி ரத்த தானம் ஆரம்பிக்கும்போது நண்பகல் 12 மணியைத் தாண்டிவிட்டது. காலை ஒன்பதரை மணியிலிருந்தே காத்திருந்த ரத்தக் கொடையாளர்கள் கடுப்பாகி கிளம்ப தொடங்கிவிட்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவர்களை சமாதானம் செய்து ரத்ததானம் பெற்றனர். ரத்ததான நிகழ்ச்சிக்கு ஜக்கையன் தாமதமாக வந்தது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

Tags :
× RELATED மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா