×

காரைக்குடியில் வீதிகளில் குவிந்து கிடக்குது குப்பை அசராத நகராட்சி நிர்வாகம்

காரைக்குடி, செப்.10: காரைக்குடி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களின் ஓரங்களில் குப்பைகள் மற்றும் செடிகள் மண்டி காணப்படுகின்றன. நகர் பகுதியில் மர்மகாய்ச்சல் ஆங்காங்கே பரவி வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.  காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 500க்கும் மேற்பட்ட தெருக்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தினமும் 48 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இது தேவகோட்டை ரஸ்தா பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. அங்கு மக்கும், மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் தினமும் குப்பை வாங்குவதற்கு என நகராட்சி சார்பில் 170க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். தவிர தனியார் வசம் குப்பை வாங்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத் தனியார் நிறுவனத்துக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 120க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களை கொண்டு குப்பை வாங்கும் பணியை செய்து வருகின்றனர். வீடுகளில் தினமும் சேகரமாகும் குப்பைகளை வாங்க வேண்டும். துப்புரவு பணிக்கு என நகராட்சி பகுதிகளை 9 டிவிசனாக பிரித்து இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. தினமும் காலை நேரங்களில் ஒவ்வொரு டிவிசனுக்கு என ஒதுக்கப்பட்ட தெருக்களை சுத்தப்படுத்தி, குப்பையை வாங்க வேண்டும். பின்பு மதிய நேரங்களில் அனைத்து துப்புரவு பணியாளர்களும் ஒன்றாக சேர்ந்து ஒவ்வொரு வார்டாக குப்பைகளை அகற்றுதல், தெருக்களில் மண்டி கிடக்கும் செடிகளை அகற்றுதல் போன்ற பணிகள் செய்ய வேண்டும்.

ஆனால் இதுபோன்ற பணிகள் அவ்வப்போது செய்யப்படுகிறது. பல தெருக்களில் நீண்டநாட்களாக செடிகள் அகற்றப்படாமல் உள்ளன. பல தெருக்களில் குப்பைகள் வீதிகளில் குவிந்து கிடக்கின்றன. இதனை பணியாளர்கள் அகற்றுவது கிடையாது. கேட்டால் கட்டணம் செலுத்தினால்தான் எடுப்போம் என கூறி அப்படியே விட்டு விட்டு செல்கின்றனர். இதனால் வீதிகளில் குப்பை குவிந்து கிடக்கிறது. தவிர மர்மகாய்ச்சல் பரவி வரும் நிலையில் இதுபோன்று குப்பை குவிந்து கிடப்பதால் அதில் சேகரமாகும் நல்ல தண்ணீரில் கொசு வளர வாய்ப்புள்ளது.  இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், டெங்கு அச்சத்தில் வீடுகளில் உள்ள மரம், செடி கொடிகள் குப்பைகளை அகற்றி தெருக்களில் கொட்டி விடுகின்றனர். இதனை நகராட்சி பணியாளர்கள் அகற்ற மறுக்கின்றனர். இதனை எடுக்க சம்மந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறி பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளனர். சுப்பிரமணியபுரம் தெற்கு விஸ்தரிப்பு 3வது தெருவில் பல மாதங்களாக தெரு ஓரத்தில் குப்பை குவிந்து கிடக்கிறது. முன்பு மரங்களில் இருந்து விழும் இலைகள் மட்டுமே கிடந்து, தற்போது அனைது குப்பைகளும் இங்கு கொட்டப்பட்டு வருகின்றன. இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குப்பை மண்டி கிடப்பதால் கொசு பிரச்சனை அதிகஅளவில் உள்ளது என்றார்.

Tags : streets ,administration ,
× RELATED அதிகார நந்தி வாகனத்தில் உலா வந்த...