×

திருப்புத்தூரில் பழுதடைந்த சிக்னல்கள் பாழாகும் அவலம் சரிசெய்து நிறுவப்படுமா?

திருப்புத்தூர், செப். 10: திருப்புத்தூரில் பழுதடைந்த சிக்னல்கள் சாலையோரத்தில் கிடப்பதால் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் பாழாகி வருகின்றன. இதனை சரிசெய்து நிறுவ வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்புத்தூரில் நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் கூடிக்கொண்டே செல்வதுடன் விபத்துகளும் அடிக்கடி நடந்து வருகின்றன. நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்தை தடுக்கவும் திருப்புத்தூர் நான்கு ரோடு பகுதியில் போக்குவரத்து நிழற்குடையுடன் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டது. நாளைடைவில் இந்த சிக்னல் கம்பங்கள் பழுதாகி பராமரிப்பின்றி காட்சி பொருளானது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை பணிகள் விரிவாக்கத்தின் போது இந்த போக்குவரத்து நிழற்குடை, சிக்னல்களை அகற்றி திருத்தளிநாதர் கோயில் சுவற்றின் அருகே போடப்பட்டன. தற்போது இந்த சிக்னல்கள் மாதக்கணக்கில் மழையிலும், வெயிலும் கிடந்து சேதமடைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயனற்று கிடக்கும் இந்த போக்குவரத்து சிக்னல்களின் பழுதை சரிசெய்து தேவையான இடங்களில் நிறுவி நெரிசலை குறைக்கவும், விபத்துகளை தவிர்க்கவும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருப்புத்தூரை சேர்ந்த சமூகஆர்வலர் வீரபாண்டியார் கூறுகையில், ‘திருப்புத்தூரில் அண்ணாசிலை, நான்குரோடு, பழைய பேருந்து நிலையம் அருகே மதுரை ரோடு முக்கு உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில் காலை, மாலை வேலைகளில் பள்ளி குழந்தைகள் வரும்போது போக்குவரத்து போலீசார் இருப்பதே கிடையாது. இதனால் வாகனங்கள் வேகமாக வருவதால் விபத்து தொடர்கதையாக உள்ளது. இந்த இடங்களில் சிக்னல்களை உடனே நிறுவ வேண்டும். மேலும் விபத்து களை தவிர்க்க காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட வேண்டும்’ என்றார்.

Tags : Tiruputhur ,
× RELATED அதிமுக நோட்டீசுடன் பணம் பட்டுவாடா: முதியவர் சிக்கினார்