×

துப்புரவு பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்குவதில்லை என புகார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம், செப்.10: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சி பகுதியில் சுய உதவிக்குழுக்கள் மூலமாக துப்புரவுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த துப்புரவு பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்காமல் பேரூராட்சி நிர்வாகம் குறைத்து வழங்குவதாக கலெக்டரிடத்தில் மனு அளித்துள்ளனர்.மனுவில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது, சாயல்குடி பேரூராட்சியில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் துப்புரவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி 40க்கும் மேற்பட்டோருக்கு தினமும் ரூ.413 வழங்க வேண்டும். ஆனால். அதை வழங்காமல் குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆட்சியரிடம் இருமுறை மனு அளித்தும் நிர்ணயித்த ஊதியம் வழங்கப்படவில்லை. துப்புரவுப் பணியாளர் வருகை பதிவேடும் முறையாக பராமரிக்கப்படவில்லை. பேரூராட்சியில் தனிநபர் கழிப்பறை திட்டம், தூய்மை இந்தியா திட்ட சமுதாய கழிப்பறைகள் போன்றவை தரமற்றும், பயனில்லாத நிலையிலும் அமைக்கப்பட்டுள்ளன. எனவே பேரூராட்சி நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறுப்பட்டுள்ளது.

இது குறித்து ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகி லிங்கம் ஆகியோர் கூறுகையில், ‘சாயல்குடி பேரூராட்சியில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலமாக துப்புரவு பணிகள் நடக்கிறது. அரசு நிர்ணயித்த சம்பளத்தை வழங்காமல் அதிகாரிகள் குறைத்து வழங்குகின்றனர். ஊதியம் வழங்குவதில் முறைகேடு நடக்கிறது. பேரூராட்சியில் நடைபெறும் ஒப்பந்த பணிகள் அனைத்திலும் முறைகேடுகள் நடக்கிறது. கலெக்டர் நேரிடையாக ஆய்வு செய்து தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படும் வேளையில் அரசு வழங்கும் ஊதியத்தை வழங்காமல் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை