×

ஏர்வாடி சுற்றுப்புற பகுதியில் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் தூர்ந்து கிடக்கும் ஊரணிகள்

கீழக்கரை, செப். 10: ஏர்வாடி சுற்றுப்புற பகுதியில் உள்ள ஊரணிக்கு மழை நீர் வரும் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் மழை நீர் ஊரணிகளுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பருவமழை காலங்களில் ஏர்வாடி பகுதியான கொம்பூதி, கருக்காத்தி உள்ளிட்ட சுற்று வட்டாரங்களில் மழை பெய்தால் அந்த தண்ணீர் இதம்பாடலில் இருந்து ஏர்வாடி வரை உள்ள வரத்து கால்வாய் வழியாக ஏர்வாடியில் உள்ள தச்ச ஊரணி, பூலா ஊரணி, ஏர்வாடி பனையடி ஊரணி, மரவன் கோவில் ஊரணி உள்ளிட்ட ஊரணிகளுக்கு வந்து ஊரணிகள் நிறைந்து காணப்படும். இவ்வாறு வரும் தண்ணீர் கோடை காலங்களில் இப்பகுதி மக்களுக்கு நல்ல பயன்தரும். ஆனால் இந்த வரத்து கால்வாய்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து தண்ணீர் வரும் பகுதியை மணலால் அடைத்து வைத்திருக்கின்றனர். இதனால் சில வருடங்களாக மழைநீர் ஊரணிக்கு வராமல் கடலில் வீணாக கலக்கிறது, எனவே இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு குழு உறுப்பினர் கரீம்கனி கூறுகையில், கடந்த சில வருடங்களாக இந்த வரத்து கால்வாயை தனியார்கள் ஆக்கிரமித்து வைத்திருப்பதால் மழைநீர் ஏர்வாடி ஊரணிக்கு வராமல் தற்போது ஊருணி வறண்டு கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே மழைகாலம் துவங்கும் முன்பு மாவட்ட கலெக்டர் உடனடியாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : neighborhood ,Airwadi ,
× RELATED ஏர்வாடியில் 144 தடையால் விலை போகாத...