×

மத்திய, மாநில அரசுகளின் உதவிகளை பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

திண்டுக்கல், செப். 10: மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உதவிகளை பெற்று சிறுபான்மையினர் பயன் பெற வேண்டும் என ஆணையத்தின் தலைவர் மகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினருக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் ஜான் மகேந்திரன் தலைமை வகித்தார். கலெக்டர் விஜயலட்சுமி, ஆணையத்தின் செயலாளர் வள்ளலாளர் முன்னிலை வகித்தனர். தமுமுக மாவட்ட துணை செயலாளர் அமீன், துணை தலைவர் ஷாஜகான்,சிபிஎஸ்இ பள்ளிகளின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் சிறுபான்மை மாணவர்களை சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் தொழில் கடன், சிறுபான்மையினர் பள்ளி ஒதுக்கீடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இதற்கு ஆணைய தலைவர் மகேந்திரன் பேசியதாவது, ‘அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக சிறுபான்மையின மக்களுக்கு கிடைப்பதற்காக, மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் துவக்கப்பட்டது. சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கு ஆணையம் துணை நிற்கும். அதேநேரம் அனைவரும் சகிப்பு தன்மையுடன் வாழ வேண்டும். அனைத்து மதத்தினர்,

அதிகாரிகளுடன் நட்பாக இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் சிறுபான்மையினருக்கு நிதி ஒதுக்குகிறது. முஸ்லீம்களில் வயது முதிர்ந்த ஆதரவற்றோர், கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் நலனுக்காக, கலெக்டர் தலைமையில் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் துவங்கப்பட்டது. சங்கம் திரட்டும் நிதி, நன்கொடை, ஆதாரத்திற்கு இணையாக அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை அரசு மானியம் வழங்குகிறது. இதன்மூலம் சிறு தொழில் துவங்கி வாழ்வதற்கு, நிதியுதவிகள் வழங்கப்படுகிறது. அதேபோல கிறிஸ்துவர்களில் அனைத்து பிரிவினரும், புனித பயணமாக ஜெருசலம் செல்வதற்கு, தமிழ்நாடு அரசு ரூ.20 ஆயிரம் வழங்குகிறது. இதன்மூலம் ஆண்டுதோறும் 500 கிறிஸ்தவர்கள் புனித பயணம் செய்யலாம். மேலும் கிறிஸ்தவ ஆலயத்தை புனரமைக்க நிதியுதவி வழங்குகிறது. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் துவங்கி, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத் தும் தேர்வில் தேர்ச்சி பெற்றால், ரூ.1 லட்சமும், மாநில அரசு நடத்தும் பணியாளர் தேர்வாணையத்தில் தேர்ச்சி பெற்றால் ரூ.50 ஆயிரமும், பயணியாளர்கள் தேர்வாணையத்தில் தேர்ச்சி பெற்றால் ரூ.35 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்ட உதவிகளை சிறுபான்மையினர் மக்கள் பெற்று பயன் பெற வேண்டும்’ என்றார். தொடர்ந்து கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில் சிறுபான்மையினருக்கு நிதியாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. இதில் டிஆர்ஓ வேலு, ஆணையத்தின் உறுப்பினர்கள் ஜெபமாலை, இருதயராஜ், ராஜன், ஜவகர்அலி, அஜித்பிரசாத், ஜெயின், கோவிந்தராஜ வர்த்தன், கூடுதல் எஸ்பி சுகாசினி உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : State Governments ,Central ,
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...