×

விருப்பாட்சி சமத்துவபுரத்தில் தண்ணீர் வந்து வருஷமாகி விட்டது கலெக்டரிடம் மக்கள் மனு

திண்டுக்கல், செப். 10: குடிநீர் கோரி விருப்பாட்சி சமத்துவபுரம் மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். திண்டுக்கல் விருப்பாட்சி சமத்துவபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து கூறியதாவது:
விருப்பாட்சி சமத்துவபுரம் திமுக ஆட்சியில் துவக்கப்பட்டது. இங்கு 130 வீடுகள் உள்ளன. அனைத்து சாதி பிரிவினரும் உள்ளனர். இப்பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் குழாய்கள், சம்ப், தண்ணீர் தொட்டி ஆகியவை கட்டியுள்ளனர். ஆனால் தண்ணீர் வந்து ஓராண்டாகிறது. இதற்கு எம்எல்ஏக்கள் சக்கரபாணி, செந்தில்குமார் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது என்பதால், எங்கள் சமத்துவபுரத்தை புறக்கணிக்கின்றனர். இங்கு அமைக்கப்பட்ட போர்வெல்லில் தண்ணீர் இல்லாமல், வெறும் காற்றுதான் வருகிறது. விருப்பாட்சி சுற்றுப்புறங்களில் நிலத்தடிநீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. காவிரியில் வெள்ளம் போகிறது. ஆனால் எங்களுக்குத்தான் காவிரி தண்ணீர் வருவதில்லை. தேவையை ஓரளவிற்காவது சமாளிக்க ஒரு குடம் ரூ.10க்கு வாங்கி குடிக்க வேண்டியுள்ளது. அந்த தண்ணீரும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் காய்ச்சல், வாந்தி- பேதி, இருமல், சளி ஏற்பட்டு அவதிப்படுகிறோம். மேலும் தொற்று நோய்களும் தாக்குகிறது. குறிப்பாக வாகன தண்ணீரை குடித்து சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ளனர்.

கூலிவேலை செய்து விட்டு வீட்டிற்கு வந்தால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. தண்ணீர் இருக்கும் தோட்டங்களை தேடி அலைய வேண்டியுள்ளது. தோட்டத்துக்காரர்களும் நாங்கள் மொத்தமாக செல்வதை பார்த்து தற்போது கெடுபிடிகள் காட்டுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நாங்கள் தண்ணீர் இல்லாமல் தினம், தினம் அவதிப்படுகிறோம். விரைவில் எங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்காவிட்டால் மக்களை திரட்டி பழநி ரோட்டில் மறியலில் ஈடுபடுவோம்’ என்றார். மனுவை பெற்ற கலெக்டர் இதுகுறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Tags :
× RELATED தேசிய ரோல்பால் போட்டிக்கு தமிழக வீரர்களை வாழ்த்தி அனுப்பும் நிகழ்ச்சி