×

ஆத்தூர்-பெரம்பலூர் ரயில் பாதை திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் திமுக எம்.பி. கோரிக்கை

ஆத்தூர், செப்.10: ஆத்தூர்- பெரம்பலூர் ரயில் பாதை திட்டத்தை உடனே செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென தென்னக ரயில்வே பொது மேலாளரிடம், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி. கவுதம சிகாமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் உள்ள தென்னக ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில், நேற்று சென்னை, சேலம் ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட எம்பிக்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி தொகுதி எம்பி கவுதம சிகாமணி கலந்து கொண்டு, தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:சின்னசேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு ரயில்வே பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மந்த கதியில் நடந்து வருகிறது. இதனை விரைந்து முடித்து, ரயில் போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னசேலம் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருப்பு அறையை நவீன வசதிகளுடன் கூடிய வகையில் மாற்றி அமைக்க வேண்டும். சின்னசேலம் மற்றும் மேல்நாரியப்பனூர், மின்னாம்பள்ளி, எருமாபாளையம், அயோத்தியாபட்டணம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டுகளை அகற்றி விட்டு, மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். சென்னை- சேலம் மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள், தலைவாசல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில், பயணிகள் ரயில்கள் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் ரயில்வே துறைக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். ஆத்தூரில் இருந்து பெரம்பலூர் வரை, ரயில் பாதை அமைக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பின் அந்த திட்டம் கண்டுகொள்ளப்படவில்லை. பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், வாழப்பாடி ரயில் நிலையங்களில் நடைபாதை உயரத்தை அதிகப்படுத்த வேண்டும். ஏத்தாப்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். விருத்தாச்சலம்-சேலம் பயணிகள் ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகளை இணைக்க வேண்டும். இவ்வாறு தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : Attur-Perambalur ,
× RELATED கிளி வளர்த்த 3பேருக்கு ₹15 ஆயிரம் அபராதம்