×

வீரகனூர் பகுதியில் பாக்கெட் சாராயம் விற்பனை ஜோர்

கெங்கவல்லி, செப்.10: வீரகனூர் பேரூராட்சி பகுதியில், பாக்கெட் சாராயம் விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீரகனூர் அருகே ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் அருகில் எல்லையம்மன் பின்புறம் உள்ள ஓடை பகுதியில், பட்டப்பகலில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் மெத்தனப்போக்குடன் உள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். இரவு நேரத்தில் சாராய பாக்கெட்டுகளுடன் அங்குள்ள பள்ளி வளாகத்திற்குள் நுழையும் குடிமகன்கள், விடிய விடிய குடித்து கும்மாளமிடுவதும், காலி பாக்கெட்டுகளை அங்கேயே வீசி விட்டு செல்வதும் வழக்கமாக உள்ளது. இதனைக்கண்டு காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகும் நிலை காணப்படுகிறது.  கெங்கவல்லி பகுதியில் சாராய வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், அருகே உள்ள வீரகனூரில் கள்ளச்சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்து வருவது அதிகரித்துள்ளது. இதற்காக தலைவாசல் பகுதியில் இருந்து தினசரி லிட்டர் லிட்டராக சாராயம் சப்ளை செய்யப்பட்டு வருவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதனை பாக்கெட்டுகளில் அடைத்து டோர் டெலிவரி செய்து வருவதாகவும் கூறுகின்றனர். எனவே, கள்ளச்சாராய சப்ளையை கட்டுப்படுத்தி, விற்பனையை தடுத்து நிறுத்தும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணியை முடுக்கி விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pocket Liquor Sales Jore ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி