×

குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திருப்பூர், செப். 10: திருப்பூரில், குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த கோரி பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு மனு அளித்தனர். திருப்பூரில், குடிநீர் விநியோகத்தை சீர்செய்ய கோரி பொதுமக்கள் நேற்று  கலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு அளித்த மனுவில் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம் வீணாம்பாளையம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அனைவரும் ஆழ்குழாய் தண்ணீரை குடிக்க, குளிக்க மற்றும் பிற தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தோம். இந்நிலையில், கடந்த காலங்களில் பருவ மழை சரியாக பெய்யவில்லை. வெயில் தாக்கமும் அதிகளவில் இருந்தது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக ஆழ்குழாய் கிணறுகள் வற்றிவிட்டது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மக்கள் தங்களது தண்ணீர் தேவைக்காக பல கி.மீ., தூரம் செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.

மேலும், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும்பாலானோர் கூலி வேலைக்கு செல்பவர்கள். ஆகையால், லாரி தண்ணீரை ரூ.ஆயிரம் கொடுத்தும் வாங்க முடியாத நிலை உள்ளது. எனவே, தண்ணீருக்கு மாற்று ஏற்பாடு செய்து பொதுமக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர். இதேபோல், தாராபுரம் பொன்னுவாடி, குள்ளங்காலிவலசு பெருந்தொழுது, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த இரண்டு மாதங்களாக தண்ணீர் விநியோகம் முறையாக இல்லை. ஆகையால் பொதுமக்கள் குடிப்பதற்கு மட்டுமல்லாமல் பிற தேவைகளுக்கு தண்ணீரை காசு கொடுத்து வாங்கி வருகின்றனர். இதனால், தண்ணீருக்கு மட்டும் மாதம் ரூ.3000 ஆயிரம் வரை செலவு ஆகிறது. இதனால் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பெண்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெண்களை சமாதனப்படுத்தி கலெக்டரிடம் மனு அளிக்க அனுப்பினர்.

Tags : collector ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...