×

கலெக்டர் அலுவலகம் முன்பு தாய், மகன் தற்கொலை முயற்சி

நாமக்கல். செப்.10: நாமக்கல்லை அடுத்த பேளுகுறிச்சியை சேர்ந்த தாயும், மகனும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கலெக்டர் அலுவலகம் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியை அடுத்த வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி சம்பூரணம்(70). இவரது மகன் பூமாலை(50). இவர்களது வீட்டின் முன்பு, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு இருவரும் எதிர்ப்பு தெரிவித்ததால், தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக சம்பூரணம் மற்றும் பூமாலை மீது, ஊர் பொதுமக்கள் பேளுக்குறிச்சி போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். அதன் பேரில், இரு தரப்பினரையும் போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க, சம்பூரணம், பூமாலை ஆகியோர் நேற்று வந்தனர். அப்போது, கேனில் வைத்திருந்த மண்ணெண்னையை எடுத்து தங்களது உடலில் ஊற்றி, தீ வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து, நல்லிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தினர். பின்னர், அறிவுரை கூறி கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.

Tags : suicide ,Collector ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...