மண் சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி

ஊட்டி, செப்.10:ஊட்டியில் மண் சரிந்து விழுந்ததில் உயிரிழந்த பெண் தொழிலாளியின் குடும்பத்திற்கு கட்டுமான தொழிலாளர் விபத்து நிதியில் இருந்து ரூ.2.50 லட்சம் வழங்கப்பட்டது. ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். இதில் குடும்ப அட்டை, வீட்டுமனை பட்டா, தொழில் மற்றும் கல்வி கடனுதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 227 மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து தாட்கோ திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.7.79 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய லோடு வாகனம், கலெக்டரின் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ் துணிக்கடை மற்றும் பெட்டி கடை வைப்பதற்காக 6 பயனாளிகளுக்கு ரூ.1.20 லட்சத்திற்கான காசோலை, கட்டுமான தொழிலாளர்கள் விபத்து நிதியில் இருந்து ஊட்டி அருகே மண் சரிந்து விழுந்து உயிரிழந்த தேவி என்பவரின் குடும்பத்திற்கு ரூ.2.50 லட்சத்திற்கான நிதி ஆகியவை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கண்ணன், கலால் உதவி இயக்குநர் பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் குருச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முகமது குதுரத்துல்லா, தாட்கோ மேலாளர் ரவிசந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : deceased ,
× RELATED குடும்ப ஒற்றுமையை காக்க நினைக்கும் சித்தி!