×

குந்தா அணை திறக்கப்பட்டு 5 மணி நேரம் நீர் வெளியேற்றம்

மஞ்சூர், செப்.10:அவலாஞ்சி அணை திறக்கப்படும் என்ற அறிவிப்பால் குந்தா அணை திறக்கப்பட்டு 5 மணி நேரம் நீர் வெளியேற்றப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் மின்சார உற்பத்திக்கு முக்கிய ஆதாரமாக உள்ள அனைத்து அணைகளிலும் நீர் மட்டம் பெருமளவு உயர்ந்தது. இதை தொடர்ந்து அப்பர்பவானி, குந்தா, பைக்காரா, கிளன்மார்கன், போர்த்திமந்து உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் இடையில் சில நாட்கள் மழை ஓய்ந்திருந்த நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் மூலம் நீர் வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பியதால் சமீபத்தில் பைக்காரா, முக்குருத்தி, கிளன்மார்கன் உள்ளிட்ட அணைகள் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் மஞ்சூர் அருகே உள்ள அவலாஞ்சி அணைக்கு நேற்று முன்தினம் காலை முதலே நீர் வரத்து வினாடிக்கு, வினாடி அதிகரித்தது. இதை தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் அணையின் நீர்வரத்து நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள்.

அணை எந்த நேரத்திலும் நிரம்பும் என்பதால் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து எமரால்டு, குந்தா, பில்லூர் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் அவலாஞ்சி அணை திறந்து விடப்படும் பட்சத்தில் அதில் இருந்து வெளியேறும் நீர் குந்தா அணைக்கு செல்லும் என்பதால் அணையின் பாதுகாப்பு கருதி முன்தினம் இரவு 6.50 மணியளவில் குந்தா அணை திறந்து விடப்பட்டது. வினாடிக்கு ஆயிரத்து 52கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் அவலாஞ்சி அணைக்கான நீர் வரத்து குறைந்ததால் அணை திறக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து சுமார் 5 மணி நேரம் நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் குந்தா அணையின் இரண்டு மதகுகளும் மூடப்பட்டு நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது. அவலாஞ்சி பகுதியில் மழையின் தாக்கம் குறைந்ததால் நீர் வரத்தும் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே அணை திறக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Kunda Dam ,
× RELATED பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குந்தா அணையில் விநாயகர் சிலைகள் கரைப்பு