×

மலர் சாகுபடியாளர்கள் கடனில் 50% செலுத்தினால் போதும்

ஊட்டி,  செப். 10:கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் கடனை கட்ட முடியாமல் தவித்து வந்த மலர்  சாகுபடியாளர்கள் வங்கியில் பெறப்பட்ட கடன் தொகையில் 50 சதவீதம்  செலுத்தினால் போதும் என வங்கிகள் அறிவித்துள்ளதால் நீலகிரி விவசாயிகள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழிலான  பசுந்தேயிலைக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் விலை வீழ்ச்சி ஏற்பட்டது. இதனை  தொடர்ந்து மாற்றுத் தொழில் மேற்கொள்ள நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு அரசு  அறிவுத்தியது. தோட்டக்கலைத்துறை மூலம் கொய் மலர் சாகுபடி மேற்கொள்ள  வங்கிகளில் கடன் பெற்று, கொய்மலர்களை உற்பத்தி செய்து இப்பகுதியில் சந்தை  இல்லாததால் விற்க முடியாமல் அவதிக்குள்ளாகினர். பெரும்பாலான விவசாயிகள்  நஷ்டத்திற்கு தள்ளப்பட்டது மட்டுமின்றி வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட  முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
 கடனை திருப்பி செலுத்த கோரி வங்கிகள்  இவர்கள் தொல்லை கொடுத்து வந்தன. ஆனால், கடனை திருப்பி செலுத்த முடியாத  இவர்கள் கடனை ரத்து செய்ய கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.  ஆனால், தமிழக அரசிடம் இருந்து எவ்வித பதிலும் கிடைக்காத  நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி, தங்களது  உண்மை நிலை எடுத்து கூறினர். இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம்  கொய்மலர் சாகுபடியாளர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்ய தமிழக அரசை  அறிவுறுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து மலர் சாகுபடியாளர்கள் மற்றும்  வங்கியாளர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.  இதில்,  மலர் சாகுபடியாளர்கள் வாங்கியுள்ள கடன் தொகையில் இருந்து 50 சதவீதம்,  அதாவது அசல் தொகையில் இருந்து ரூ.50 சதவீதம் செலுத்தினால் போதுமானது என  தெரிவித்துள்ளது. மேலும், இதனை ஓராண்டிற்குள் கட்டி முடிக்க கால அவகாசமும்  அளிக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்ட  மலர் சாகுபடி சிறு விவசாயிகள் சங்க தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது, நீலகிரி  மாவட்டத்தில் சிறு விவசாயிகளாக உள்ள நாங்கள் கடந்த 10 ஆண்டுக்கு முன்  ேதாட்டக்கலைத்துறை அறிவுறுத்தலின் பேரில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள்  வங்கி கடன் பெற்று பசுமை குடில்கள் அமைத்து கொய்மலர் சாகுபடியில்  ஈடுபட்டோம். மலர் சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்டதால், வங்கியில்  வாங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் எங்களுக்கு அரசு நிவாரணம்  வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். இதனை தொடர்ந்து,  நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை ஆய்வு மேற்கொண்டு  பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி, அந்த அறிக்கையை  மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்தது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம்,  எங்களையும், வங்கி அதிகாரிகளையும் அழைத்து சமரச பேச்சு வார்த்தையில்  ஈடுபட்டனர். இதில் சுமூகமான முடிவு எட்டப்பட்டது என்றார்.

Tags : Flower growers ,
× RELATED கர்நாடகாவில் 1,610 கோடி சிறப்பு தொகுப்பு:...