×

முன்னாள் படைவீரர்கள் மையத்துக்கு சொந்தமான 11 கடைகள் இடித்து அகற்றம் புதிதாக கட்ட முடிவு

கிருஷ்ணகிரி, செப்.10: கிருஷ்ணகிரி- பெங்களூரு சாலையில், முன்னாள் படைவீரர்கள் மையத்திற்கு சொந்தமான 11 கடைகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன. கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் முன்னாள் படைவீரர்கள் மையத்திற்கு சொந்தமான  11 கடைகளை நேற்று ஆர்டிஓ  தெய்வநாயகி, தாசில்தார் ஜெய்சங்கர், நகராட்சி ஆணையாளர் (பொ) சிசில்தாமஸ், ஆர்ஐ சக்தி, விஏஓ செந்தில்குமார் ஆகியோர் போலீசார் பாதுகாப்புடன் இடித்து அகற்றினர். இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் பிரேமா கூறுகையில், முன்னாள் படைவீரர் மையத்திற்கு சொந்தமான வெளிப்புறசுவர் முன்புறம், மையத்திற்கு வருவாய் ஈட்டும் வகையில், கடந்த 1973-74ம் ஆண்டில் 11 கடைகள் கட்டப்பட்டது. இக்கடைகள் பொது ஏலத்தின் மூலம் உரிமத்திற்கு விடப்பட்டது. 11 மாத காலத்திற்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்கவும், பொதுப்பணித்துறை நிர்ணயம் செய்யும் உரிம கட்டணத்தை செலுத்தி ஒப்புக்கொண்டும், அனைத்து ஒப்பந்தங்களையும் உள்ளடக்கி, உரிமத்திற்கு 11 மாதங்களுக்கு ஒரு முறை 8 சதவீத வாடகை உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் 11 கடைகள் வாடகைக்கு விடப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் படைவீரர்கள் மையக் கட்டிடம் மிகவும் பழுதடைந்ததால், இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. முன்னாள் படைவீரர் துறையின் மூலம், கடந்த 1999ம் ஆண்டு ₹72.49 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. இதே போல் மையக்கடைகளை இடித்து விட்டு, புதியதாக கட்டிடம் கட்ட முடிவு செய்து கடையை நடத்தி வந்த உரிமைதாரர்களுக்கு, கடையை காலி செய்யக்கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் கடையை நடத்தியவர்கள் காலி செய்யவில்லை. 20 ஆண்டுகளாக வாடகையும் செலுத்தாமல் தொடர்ந்து கடையினை நடத்தி வந்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து
வருவாய்த்துறையினர், காவல்துறையினர் பாதுகாப்புடன் நேற்று இடித்து அகற்றினர். இந்த இடத்தில்  புதியதாக கடைகள் கட்டப்பட்டு,  முன்னாள் படைவீரர்களுக்கு வாடகைக்கு விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : shops ,Veterans Center ,
× RELATED கடைகளுக்கு அபராதம்