×

சூளகிரி அருகே மயானம் ஆக்கிரமிப்பு மீட்டுத்தர கோரிக்கை

கிருஷ்ணகிரி,  செப்.10: சூளகிரி அருகே மருதாண்டப்பள்ளி கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மயானத்தை மீட்டுத்தர கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு வழங்கினர்.  கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறை தீர்க்கும்  நாள் கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது. இதில், சூளகிரி  அடுத்த மருதாண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மோட்டப்பா, வீரப்பா உள்ளிட்டோர்  தலைமையில் வந்த பொதுமக்கள், கலெக்டரிடம் வழங்கிய மனுவில்  கூறியிருந்ததாவது: மருதாண்டப்பள்ளி கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கு  தனியாக மயானம் உள்ளது. தற்போது இந்த மயானத்தை ஓய்வுபெற்ற  கிராம உதவியாளரான பாப்பண்ணா மகன் லட்சுமணன் என்பவர், ஆக்கிரமிப்பு  செய்து கொண்டு, இறந்தவர்களின்  உடல்களை புதைக்கவோ, எரிக்கவோ கூடாது என கூறுகிறார். இதை தட்டிக்கேட்டால் கத்தி மற்றும் உருட்டுக்கட்டை எடுத்துகொண்டு வந்து தாக்க  முயற்சிக்கிறார்.

இதனால், எங்கள் காலனியில் இறந்தவர்களை  புதைக்க கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மயான நிலத்தை மீட்டு,  மிரட்டும் லட்சுமணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு  மனுவில் கூறியுள்ளனர்.
இதே போல், வேப்பனஹள்ளி அடுத்த  பூதிமுட்லு புதிய காலனியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், புதிய  காலனியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக 42 குடும்பத்தினர் வீடுகட்டி வசித்து  வருகின்றனர். இதில் 17 வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. 27  வீடுகளுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பல  ஆண்டுகளாக பட்டா கேட்டு மனு கொடுத்தும், இதுவரை பட்டா வழங்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Mayanam ,Sulagiri ,
× RELATED சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில்...