×

இலவச பட்டா நிலத்தை அளந்து காட்டாததால் 90 குடும்பத்தினர் போராட்டம் சப்-கலெக்டர் சமரசம்

தர்மபுரி, செப்.10: தர்மபுரி அருகே, இலவச பட்டா வழங்கிய இடத்தை இதுவரை அளந்து காட்டாததால், பொதுமக்கள் குடியேறும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி-பென்னாகரம் சாலையில் உள்ள ஆட்டுக்காரம்பட்டி அருந்ததியர் காலனியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். கடந்த 1994ம் ஆண்டில், இவர்களில் 90 பேருக்கு அரசு சார்பில் இலவச பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தை அளந்து காட்டுவதில் அதிகாரிகள் தாமதம் செய்து வந்தனர். இதனிடையே, அப்பகுதியை சேர்ந்த சிலர், இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்தனர். இதனால், இலவச பட்டா பெற்றும் அதில் குடியேற முடியாமல் அவர்கள் தவித்து வந்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், இந்த நிலம் அருந்ததியர் இன மக்களுக்கு சொந்தம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால், அதன் பின்னரும் வருவாய்த்துறையினர் நிலத்தை அளந்து காட்டாமல் தாமதம் செய்து வந்தனர். இதையடுத்து, நேற்று இலவச பட்டா பெற்ற 90 குடும்பத்தினர், தங்களது நிலத்தில் குடியேறும் போராட்டத்தை துவங்கினர். இதையறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, தர்மபுரி தாசில்தார் சுகுமார், பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக சப்-கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் உறுதியளித்தார். இதனை ஏற்று, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.  இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘எங்களுக்கு கொடுத்த நிலத்தில் வசிக்க முடியாமல், கடந்த 25 வருடமாக  போராடி வருகிறோம். இது தொடர்பாக, கடந்த 8 மாதமாக 17 முறை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். ஆனாலும், பட்டா நிலத்தை அளந்து காண்பிக்கவில்லை. எங்களது நிலத்தை உடடினயாக அளந்து காண்பிக்க வேண்டும். மேலும், எங்களது நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்ற வேண்டும்,’ என்றனர்.

Tags : sub-collector ,land ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!