×

அவ்வையார் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி திரளானோர் பங்கேற்பு

தர்மபுரி, செப்.10: தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு, தற்காப்புக்காக கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது.  மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறை மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில், 206 அரசு பள்ளிகளில் படிக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு, தற்காப்பு கலைகளான டேக்வாண்டோ மற்றும் கராத்தே பயிற்சி அளித்தல் கடந்த மாதம் துவங்கியது. நேற்று அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளியில், தற்காப்பு கராத்தே பயிற்சி துவங்கியது. பயிற்சியை மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்ரமணி துவக்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர் தங்கவேலு முன்னிலை வகித்தார். தென்னிந்திய கராத்தே சங்கத்தின் தலைவரும், தலைமை பயிற்சியாளருமான நடராஜ், மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில், ஆபத்து ஏற்படும் சூழ்நிலையில் மாணவிகள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது, எதிரியை தாக்குவது போன்ற பயிற்சிகளை கற்று கொடுத்தார். நிகழ்ச்சியில் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால், உதவி தலைமையாசிரியை தெரசாள் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Karate Trainers ,Government School ,