×

நர்சின் அலட்சியத்தால் தடுப்பூசி போடும் போது குழந்தை தொடையில் சிக்கிய ஊசி

மேட்டுப்பாளையம், செப்.10:  மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி  போடும் போது தொடையில் ஊசி சிக்கியதுகுறித்து மருத்துவ அதிகாரியிடம் தாய் புகார் அளித்தார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர். புரத்தை சேர்ந்தவர் பிரபாகரன்.(28). மொபைல் கடை வைத்துள்ளார்.இவரது மனைவி மலர்விழி(20). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் 2 வது முறையாக கர்ப்பிணியான மலர்விழி கடந்த மாதம் 19ம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் மலர்விழிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 21ம் தேதி மாலை நர்ஸ் குழந்தையின் இடது கை மற்றும் இடது தொடையில் தடுப்பூசி போட்டுள்ளார். தொடர்ந்து 31ம் தேதி மலர்விழி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

வீட்டிற்கு சென்றது முதல் பச்சிளங்குழந்தை அழுது கொண்டே இருந்தது. குழந்தைக்கு ஊசி போட்ட இடது தொடையில் லேசான வீக்கம் காணப்பட்டது. நாளடைவில் வீக்கம் பெரிதாகி கொண்டே வந்தது. குழந்தையும்  அழுது கொண்டே இருந்தது. இந்நிலையில், நேற்று காலை மலர்விழியின் தாய் தேன்மொழி குழந்தையை குளிப்பாட்டும் போது இடது தொடையில் சுருக்கென்று ஏதோ குத்தியது. அந்த இடத்தில் இருந்து ரத்தம் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேன்மொழி குழந்தையின் இடது தொடையை தொட்டுப்பார்த்த போது ஊசி போட்ட இடத்தில் ஊசியின் கூர்முனை வெளியே தெரிந்தது. உடனே அவர் வீட்டில் இருந்தவர்கள் உதவியுடன் தொடையில் சிக்கியிருந்த ஊசியை அகற்றினார். நர்சின் அலட்சியப் போக்கால் பிறந்த பச்சிளங்குழந்தையின் தொடையில் ஊசி சிக்கி சுமார் 20 நாள் வலியால் அழுது துடித்துக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து, குழந்தையின் தாய் மலர்விழி மற்றும் உறவினர்கள் குழந்தையை எடுத்துக்கொண்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று தலைமை மருத்துவ அலுவலர் இளஞ்செழியனிடம் நடந்த சம்பவம் குறித்து புகார் தெரிவித்தனர்.இதுகுறித்து மருத்துவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : baby ,nurse ,
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி