×

காலிங்கராயன் வாய்க்கால் கரையில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார கேடு

ஈரோடு, செப். 10: ஈரோடு அருகே காலிங்கராயன் வாய்க்கால் கரையில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதாரகேடு ஏற்பட்டு வருகிறது. இதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்று நீர் காலிங்கராயன்பாளையம் என்ற இடத்தில் உள்ள தடுப்பணை மூலம் கொடுமுடி ஆவுடையார்பாறை வரை காலிங்கராயன் வாய்க்கால் பாய்ந்து செல்கிறது. காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் பேபி கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பது குறைந்துள்ளது. இந்நிலையில், காலிங்கராயன் வாய்க்கால் கரையோர பகுதிகளில் குப்பைகளையும், கட்டிட கழிவுகளையும், ஓட்டல்களில் இருந்து வரும் கழிவுகளையும் கொட்டுகின்றனர்.

பொதுப்பணித்துறை சார்பில் வாய்க்கால் கரையில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டக்கூடாது. மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். வாய்க்கால் கரையில் வண்டி, வாகனங்களை நிறுத்தி கழுவ கூடாது என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதைமீறி கரையோர பகுதிகளில் குப்பை கொட்டுவது தொடர்ந்து நடக்கிறது. இவ்வாறு கொட்டப்படும் குப்பை கழிவுகள் வாய்க்காலில் கலக்கிறது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : banks ,Kalingarayan ,
× RELATED 24,000 வேட்டி சேலைகள் பதுக்கல் அதிமுக...