×

கோவையில் சூரிய மின்திட்ட இலவச தொழிற்பயிற்சி

கோவை, செப்.10: கோவை அருகே வடவள்ளியில் இயங்கி வரும் நேர்டு பன்னாட்டு புதுப்பிக்க கூடிய எரிசக்தி வளர்ச்சி நிறுவனத்தில் ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய சூரிய மின்திட்ட 3 மாத இலவச தொழிற் பயிற்சியை முடித்தவர்களுக்கு வேலைக்கான நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் பன்னாட்டு புதுப்பிக்க கூடிய எரிசக்தி வளர்ச்சி நிறுவன இயக்குனர் பேராசிரியர் காமராஜ் கலந்து கொண்டு பணிநியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது: மத்திய எரிசக்தி அமைச்சகம் 2022ம் ஆண்டிற்குள் 1.75 லட்சம் மெகாவாட் எரிசக்தி, கரிம எரிவாயு மற்றும் சூரிய சக்தி போன்ற புதிய மற்றும் புதுப்பிக்க கூடிய எரிசக்தி வளங்களில் இருந்து உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

மேலும், 2022ல் பேட்டரி கார்களுக்கு டீசல் மற்றும் பெட்ரோல் எரிபொருட்களை பயன்படுத்தாமல் சூரிய சக்தியால் சார்ஜ் செய்யும் முறை அமலுக்கு வர உள்ளது. இதனால் சூரிய சக்தி மின் திட்டத்தை செயல்படுத்த 5 லட்சத்திற்கு மேற்பட்ட தொழில்நுட்ப உதவியாளர் உடனடியாக தேவைப்படுகின்றனர். இவர்களை உருவாக்க மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்க கூடிய எரிசக்தி அமைச்சகம், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி நாடு முழுவதும் வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கோவை நேர்டு தொண்டு நிறுவனத்தில் 3 மாத காலத்திற்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த பின்னர் மத்தியஅரசின் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சியை முடித்தவர்களுக்கு சொந்தமாக தொழில் துவங்குவதற்கோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ வேலை வாய்ப்போ ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது. செப்டம்பர் 8ம் தேதி பயிற்சி துவங்கி உள்ளது. இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் 9443934139 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags : Coimbatore ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...