×

காவிரியில் உபரியாக செல்லும் நீரை குழாய் மூலம் கொண்டு சென்று பாசன குளங்களை நிரப்ப வேண்டும் தோகைமலை விவசாயிகள் சங்க பேரவை கூட்டத்தில் வலியுறுத்தல்

தோகைமலை, செப். 10: காவிரியில் உபரியாக செல்லும் நீரை குழாய் மூலம் கொண்டு சென்று பாசன குளங்களை நிரப்ப வேண்டும் என தோகைமலையில் நடந்த விவசாயிகள் சங்க பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கரூர் மாவட்டம் தோகைமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தோகைமலை ஒன்றிய பேரவை கூட்டம் சங்கத்தின் தலைவர் ரெத்தினம் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இலக்குவன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், காவிரியில் வீணாக சென்று கடலில் கலக்கும் உபரி நீரை வறட்சியால் சிக்கித்தவிக்கும் கிருஷ்ணராயபுரம், தோகைமலை, குளித்தலை ஒன்றிய பகுதிகளில் உள்ள பாசன குளங்களுக்கு குழாய்கள் மூலம் கொண்டு சென்று நிரப்ப வேண்டும். இதற்கு மாயனூரில் இருந்து பஞ்சப்பட்டி வழியாக பஞ்சப்பட்டி பெரிய பாசன ஏரி, பாப்பக்காபட்டி, வயலூர், கழுகூர், நாகனூர், பறந்தாடி, தோகைமலை, கூடலூர், புத்தூர், வடசேரி, புழுதேரி, ஆர்டி மலை, நல்லூர் உள்பட 3 ஒன்றியங்களில் உள்ள விவசாய பாசன குளங்களுக்கு குழாய்கள் மூலம் காவிரி உபரி நீரை கொண்டு சென்று நிரப்ப வேண்டும்.

பல ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து போனதால் வறட்சியால் விவசாயம் அழிந்து, தற்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதோடு நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக மாவட்ட நிர்வாகம் அமைக்கும் 80 சதவீதம் போர்வெல்கள் (ஆழ்குழாய் கிணறுகள்) தண்ணீர் இன்றி வறண்டு போவதால் அரசின் நிதி வீணாவதோடு பொதுமக்களுக்கான தேவையும் நிறைவேற்றாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு காவிரியில் உபரியாக செல்லும் தண்ணீரை மாயனூரில் இருந்து பஞ்சப்பட்டி வழியாக குழாய்கள் மூலம் பாசன குளங்களுக்கு விட்டு நிரப்பினால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து பொதுமக்களுக்கான குடிநீர் தேவை பூர்த்தி ஆவதோடு அரசு நிதி வீணாவதையும் தடுக்கலாம். மேலும் அழிந்துபோன விவசாயத்தையும் மீட்டு எடுக்கலாம். ஆகவே மாவட்ட நிர்வாகம் தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். மேலும் சங்கத்தின் புதிய தலைவராக ரெத்தினம், செயலாளராக அய்யர், பொருளாளராக முனியப்பன், துணை தலைவராக சக்திவேல், துணை செயலாளராக தங்கராசு ஆகிய புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் நிர்வாகிகள் முருகேசன், சங்கபிள்ளை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Kauri ,
× RELATED ஜானுவை மறக்க வைத்த செந்தாழினி: கவுரி கிஷன் நெகிழ்ச்சி