×

பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி உபரி நீரை கொண்டு வர வலியுறுத்தி போராட்டம் 25 பஞ்சாயத்து விவசாயிகள், பொதுமக்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

குளித்தலை, செப். 10: பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி உபரி நீரை கொண்டு வர வலியுறுத்தி போராட்டம் நடத்துவது என 25 பஞ்சாயத்து விவசாயிகள், ெபாதுமக்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பஞ்சப்பட்டியில் தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய ஏரியாக 1170 ஏக்கரில் 1.8 டிஎம்சி தண்ணீர் கொள்ளளவு கொண்ட பஞ்சப்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் சுற்றுப்புற கிராமத்திலிருந்து மழைக்காலங்களில் வரும் காட்டுவாரி தண்ணீர் வந்து நிரம்பினால் இந்த பஞ்சப்பட்டி ஏரி சுற்றியுள்ள விவசாயிகள் அதிக அளவில் விவசாயம் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பல ஆண்டுகளாக மழையின்றி தண்ணீரின்றி வறண்டு விட்டதால் ஏரிகள் தூர்வாரப்படாமல் பயன்பாடின்றி இருந்து வந்தது. இந்நிலை குறித்து இப்பகுதி விவசாயிகள் பல முறை அரசுக்கு எடுத்து கூறி பஞ்சப்பட்டி ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் மாயனூர் தடுப்பணையில் இருந்து மழைக்காலங்களில் வரும் உபரி நீரை பஞ்சப்பட்டி ஏரிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. மேலும் தற்போது மேட்டூர் அணை 120 அடியை எட்டி உள்ளதால் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த நீர் மாயனூர் குளித்தலை முக்கொம்பு சென்று கொள்ளிடத்தில் பிரிந்து செல்கிறது. இந்த உபரி நீரை தான் பஞ்சப்பட்டி கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பஞ்சம்பட்டி சுற்றியுள்ள 25 கிராம பஞ்சாயத்து விவசாயிகள் பொதுமக்கள் ஒன்று கூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

கூட்டத்திற்கு விவசாயி பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கரிகாலன் அனைவரையும் வரவேற்றார். சிவாயம் புதினா சரவணன், போத்துராவுத்தன்பட்டி ஆண்டியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழகத்தில் மூன்றாவது பெரிய ஏரியாக உள்ள பஞ்சப்பட்டி ஏரி சம்பந்தமாக ஆலோசனை செய்ய ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி இது சம்பந்தமாக அரசிடம் அனுமதி பெற நடவடிக்கை எடுப்பது ஆயிரத்தி 170 ஏக்கர் பரப்பளவு கொண்ட பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரியிலிருந்து உபரி நீரை கொண்டுவருவது சம்பந்தமாகவும் இந்த ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மத்திய மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விரைவில் தேதி குறிப்பிட்டு மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது இக்கூட்டத்தில் பஞ்சப்பட்டி சுற்றி உள்ள 25 பஞ்சாயத்துக்களில் இருந்து விவசாயிகள், பொது மக்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : panchayat farmers ,consultation ,
× RELATED கொரோனா தொற்று பரிசோதனைகளை குறைப்பது...