×

கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு குடிநீர்கோரி காலி குடங்களுடன் மனு கொடுக்க வந்த பெண்கள்

கரூர், செப். 10: குடிநீர் கோரி பெண்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். கரூர் மாவட்டம்கடவூர் தாலுகா மஞ்சநாயக்கன்பட்டி வீரியபட்டி பொதுமக்கள் நேற்று தங்கள் பகுதிக்கு காவிரி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் எனக்கோரி காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் அளித்த மனுவில், எங்கள் ஊரில் 20 ஆயிரம் குடும்பத்தினர் வசிக்கிறோம். கிழக்கே சமத்துவபுரம் வரை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வீரியபட்டி குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றி இந்த இடத்தில் பைப் அமைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அனைவருக்கும் குடிநீர் கிடைக்கும். மேலும் டேங்க் ஆபரேட்டரை மாற்ற வேண்டும். தெருவிளக்கு எரியாததால் இரவில் நடமாட முடியவில்லை. நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். வெள்ளியணை மேட்டுப்பட்டி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் துணை செயலாளர் ராஜாங்கம் அளித்த மனுவில், வெள்ளியணை கிராம நிர்வாக அலுவலர் நில அளவை செய்வதற்கு பணியில் உள்ளவரை அழைக்காமல். ஓய்வுபெற்ற சர்வேயரை பயன்படுத்துகிறார்.

கிராம நிர்வாக அலுவலர் பணிபுரியும் இடத்தில் குடியிருக்க வேண்டும் என்ற விதி உள்ளது, அதன்படி இங்கேயே அமர்ந்து விவசாயிகளை அலைக்கழிக்காமல் சான்றிதழ்களை வழங்க நடவடிககை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் முல்லையரசு அளித்த மனுவில், அரவக்குறிச்சி தாலுகா மானார்பட்டியில் தேங்காய் தொட்டி கரிசுடும் ஆலை அனுமதியின்றி இயங்கி வருகிறது. நிலத்தடிநீர், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராயனூர்- கோடங்கிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டப்படாததால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலிகள் ஏற்படுகின்றது. இரவில் ஒளிரும் மின்விளக்குகளை அமைக்கவில்லை. பெயர் பலகைகள் சரியான முறையில் வைக்கப்படவில்லை. மேற்கண்ட வசதிகள் செய்யப்படும் வரை சுங்கவரி வசூலிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பாமக மாவட்ட தலைவர் பாபு, செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் அளித்த மனுவில், காவிரி, அமராவதி ஆறுகளில் இரவுநேரங்களில் டயர் வண்டியை பயன்படுத்தி மணல் திருட்டு நடக்கிறது. ஓரிடத்தில் கொட்டி வைத்து லாரியில் கடத்துகின்றனர். மணல் திருட்டில் ஈடுபட்டு வருபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என தெரிந்தும் தொடர்ந்து சிலர் இதில் ஈடுபட்டு வருகின்றனர். மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். கரூர் மாவட்டம் பள்ளபட்டியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

Tags : women ,office ,Collector ,
× RELATED 2.5 கிலோ நகை அணிந்து வந்த கர்நாடக...