×

முத்துப்பேட்டை அடுத்த துறைத்தோப்பு பகுதியில் மின் கம்பியில் உரசி அடிக்கடி தீப்பிடித்து எரியும் பனைமரம் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்

முத்துப்பேட்டை, செப்10: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் ஊராட்சி துறைத்தோப்பு கிராமத்தில் உள்ள வேதாரண்யம் சாலையில் பத்தர்கடை முதல் ஐயனார் கோவில் துவங்கி லிங்கத்தடி வரை சாலை இருபுறமும் ஏராளமான பனை மரங்கள் உள்ளது. இதன் அருகே வாய்மேடு மின் நிலையத்திலிருந்து செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகள் மற்றும் அப்பகுதிக்கு மின் விநியோகம் செய்யும் கம்பிகள் சாலையோரம் மின் கம்பம் அமைக்கப்பட்டு செல்கிறது, இதில் சமீபத்தில் கஜா புயலுக்கு பிறகு இந்த பகுதியில் இருந்த பாதிக்கப்பட்ட மின் கம்பங்களை அகற்றிவிட்டு அதிகளவில் உயரம் கொண்ட புதிய கம்பங்கள் நடப்பட்டது. இந்தநிலையில் இந்த மின் கம்பத்தில் இணைக்கப்பட்டு செல்லும் உயர மின் அழுத்த கம்பிகள் இப்பகுதியில் உள்ள பனை மரங்களை உரசியவாறு பல இடங்களில் செல்வதால் இப்பகுதியில் உள்ள பனை மரங்கள் அடிக்கடி எரிந்து விபத்துக்குள்ளாகி வருகிறது. இந்தநிலையில் நேற்று மதியம் ஐயனார் கோவில் எதிர்புறம் இருந்த பனை மரம் அருகே செல்லும் உயர மின் அழுத்த கம்பியில் பட்டு கொழுந்துவிட்டு எரிந்தது.

இதனால் அதர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அப்பகுதி மின் ஊழியருக்கு தகவல் தொலைபேசி மூலம் தெரிவித்தனர். ஆனால் மின் ஊழியர் “இது தினந்தோறும் நடப்பதுதானே ஒன்றும் ஆகாது” என்று கூறிவிட்டு போனை கட் செய்து விட்டார். பின்னர் அப்பகுதி மக்கள் ஊராட்சி செயலருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி செயலர் முத்துப்பேட்டை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளருக்கு தகவல் தெரிவித்து அப்பகுதி மின் விநியோகத்தை நிறுத்தினார். இதனையடுத்து பெரியளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் அந்த பனை மரம் பல பகுதியில் தீயில் கருகி எந்தநேரத்திலும் விழும் ஆபத்தில் உள்ளது.

அதேபோல் இப்பகுதியில் இதுபோன்று விபத்து ஏற்பட்டு சாலையோரத்தில் எராளமான பனை மரங்கள் உள்ளது. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது அதேபோன்று எந்தநேரமும் வாகன போக்குவரத்து காணப்படும் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படும்போது பெரியளவில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே இப்பகுதி மக்கள் நலன் கருதி இந்த பனை மரங்கள் உள்ள பகுதியில் மின் கம்பங்களை சற்று தள்ளி வைத்து ஊன்ற வேண்டும் தற்பொழுது ஆபத்தான நிலையில் உள்ள பாதிக்கப்பட்ட பனை மரங்களை அகற்ற வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Muthupettai ,
× RELATED முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி...