×

முத்துப்பேட்டையில் புயலால் சேதமான கோரையாறு ஷட்ரசை சீரமைக்காமல் வர்ணம் பூச்சு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

முத்துப்பேட்டை, செப்.10 : திருவாரூர்மாவட்டம் முத்துப்பேட்டை பகுதிக்கு வரும் கோரையாறு இப்பகுதி விவசாயிகளின் நீர் ஆதாரமாகவும், பாசனத்தை பெற்றுத்தரும் முக்கிய ஆறாகவும் உள்ளது. திருவாரூர் தொடங்கி திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் பல பகுதியில் கிளைகளாக பிரிந்து அப்பகுதி விவசாயிகளுக்கு பாசன ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் உள்ள கோரையாற்றில் அமைந்துள்ள (ஷட்ரஸ்) தடுப்பணை தண்ணீர் தேக்கம் மூலம் ஆலங்காடு, கரைதிடல், உப்பூர், கோபாலசமுத்திரம், வீரன்வயல், கழுவங்காடு போன்ற பகுதி விவசாயத்திற்கும், அதேபோல் தடுப்பணை அருகே பிரிந்து செல்லும் பாசன வாய்க்கால் மூலம் ஜாம்புவானோடை பகுதி விவசாயத்திற்கும் மற்றும் அப்பகுதி பல்வேறு வகையில் நீர் ஆதாரத்தையும் பெற்று தருகிறது. மிகவும் பழமையான இந்த தடுப்பனை முறையாக பராமரிக்கபடாததால் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது. அதேபோல் தடுப்பணை கதவுகளை திறக்க செல்லும் மேல் பகுதியில் நடைபாதையில் சிலாப் பொழிவு இழந்து சேதமாகி இருந்தது. மேலும் பல பகுதி உடைந்து விழுந்து இருந்தது. சென்ற 2009ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது தடுப்பனையில் தெற்கு பகுதியில் ஒருபகுதி உடைப்பு ஏற்பட்டு சீரமைக்கப்பட்டது. இந்தநிலையில் தடுப்பணையின் மேல்பகுதி நடைபாதையில் அன்று முதல் இன்று வரை புதிய பேருந்து நிலையம் பகுதியிலிருந்தும், அதேபோல் ஜாம்புவானோடை மற்றும் தர்ஹா பகுதியிலிருந்தும் மக்கள் குறுக்கே செல்வதற்காக நடைபாதையாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த தடுப்பணை ஒட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளதால் மாணவர்கள் சிலரும் இந்த பாதை வழியாக கடக்கும் சூழலும் ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சமீபகாலமாக சேதமாகியுள்ள இந்த நடைபாதையால் இதில் பயணம் செய்யும் மக்களுக்கு ஆற்றுக்குள் விழுந்து உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன சிறுவர்கள் விழ அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில் பழுதடைந்த இந்த தடுப்பனை (சட்ரஸ்)யை சீரமைத்து தரவேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளோ, மாவட்ட நிர்வாகமோ கண்டுகொள்ளவில்லை. ஆனால் இதற்கு மாறாக ஒவ்வொரு ஆண்டும் பொதுப்பணித்துறை இந்த தடுப்பனைக்கு வர்ணம் பூசிஅழகு பார்த்து வந்தது. இதுகுறித்தும் இதன் ஆபத்து குறித்தும் பலமுறை தினகரனில் சுட்டிக்காட்டி செய்தி வெளியிடப்பட்டது. அந்தநேரத்தில் அதிகாரிகள் பெயரளவில் சீரமைப்பு பணி மேற்க்கொண்டு வந்தனர். சமீபத்தில் கஜா புயலுக்கு முன்பு கூட பெயரளவில் சீரமைப்பு பணிநடந்தது. இந்தநிலை சமீபத்தில் முத்துப்பேட்டை பகுதியை தாக்கிய கஜா புயலின் கோரதாண்டவத்திற்கு இந்த ஆசாத்நகர் தடுப்பணையையும் விட்டு வைக்கவில்லை. கஜா புயலின் வேகத்திற்கு இந்த தடுப்பணை (ஷட்ரஸ்) திருகு, ஹெட், ஷட்டர் ராடு இணைப்பிலிருந்த சிமெண்ட் இணைப்பு நடை பாதை சிலாப் கைபிடி சுவர் ஆகியவை இடிந்து விழுந்தது. அதன் இணைப்பிலிருந்த கான்கிரீட்டும் இணைப்புகளும் உதிர்ந்து விழுந்தன. இதனால் ஷட்டர் ராடை சுழற்றி இயக்க வழியில்லை என்பதோடு ஷட்டரை மேலே ஏற்றி இறக்கவும் முடியாத நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் மாறியது.

இதனால் நடப்பாண்டு பாசன நீரை தேக்கி வைத்து தேவைக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறித்து இப்பகுதி விவசாயிகள் அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றனர். அதேபோல் தினகரனில் செய்தியும் வெளியிடப்பட்டது. இதையடுத்து தடுப்பணையை சீரமைப்பு பணிகளை மேற்க்கொள்வது போன்று சிறு சிறு பணிகளை பெயரளவில் செய்துவிட்டு வர்ணம் பூசிவிட்டு சென்றனர். ஆனால் தற்போது இந்த தடுப்பணை எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்த தடுப்பணைக்கு காவிரிநீர் வந்து சேர்ந்தது. அதிகளவில் தண்ணீர் வரும் பட்சத்தில் தண்ணீரின் வேகத்தில் தடுப்பணை இடிந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆகவே இனியும் காலதாமதம் படுத்தாமல் போர்க்கால அடிப்படையில் அதிகளவில் தண்ணீர்வரும் முன்பு இந்த தடுப்பணை இடிந்து விழாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்படுத்த அரசு முன்வரவேண்டும் பின்னர் வருங்காலத்தில் இதனை இடித்துவிட்டு புதியதாக கட்டவேண்டும் என்று இப்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர;.

இதுகுறித்து தமிழக விவசாய நலன் சங்க மாநில துணைச்செயலாளர் வடுகநாதன் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் கடைசி கடைமடை பகுதியான முத்துப்பேட்டை பகுதி காவிரிநீரை நம்பியே சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீரைத்தேக்கி பாசன பயன்பாட்டுக்கு தரும் ரெகுலேட்டர்கள் மதகுகள், முறையாக பராமரிக்க படுவதில்லை. தற்பொழுது சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலுக்கு மேலும் இப்பகுதி தடுப்பணைகள் சேதமாகி உள்ளது இவைகள் அனைத்தையும் நடப்பு குடிமராமத்து பணியிலாவது இவற்றை சரிசெய்துதர வேண்டும் என்றார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் முகமது மாலிக் கூறுகையில், சேதமாகி உள்ள இந்த தடுப்பணையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும். பின்னர் நடப்பாண்டில் இடித்துவிட்டு அவசர கால திட்டமாக கருதி புதிய தடுப்பணை கட்ட வேண்டும் அந்த பணியை இப்பவே துவங்க வேண்டும். அதேபோல் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கடல்நீர் உட்புகுந்து வருகிறது இதனால் நிலத்தடிநீரை இப்பகுதி மக்கள் பயன்படுத்த முடியாதளவில் உள்ளது. இதனை தடுக்கும் வகையில் ஜாம்புவானோடை படகுத்துறை அருகில் ஆற்றின் தரைமட்டத்திற்கு ஒரு தடுப்பணையை ஏற்படுத்தி தரவேண்டும் என்றார்.

Tags : storm ,
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; 148.54 கோடி...