×

கலெக்டர் வேண்டுகோள் விட்டலூர் சமுதாய குளத்தை தூர்வாராததால் தண்ணீர் நிரப்ப முடியவில்லை

கும்பகோணம், செப். 10: விட்டலூர் சமுதாய குளத்தை தூர்வாராததால் தண்ணீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குளத்தை விரைந்து தூர்வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் தாலுகா விட்டலூர் கிராமத்தில் சமுதாய குளம் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்குளத்தால் 500 ஏக்கர் விவசாய நிலம் பாசனத்துக்கு பயன்பட்டு வந்தது. இக்குளத்துக்கு காவிரியாற்றில் இருந்து பிரியும் நாட்டார் ஆறு மூலம் தண்ணீர் வந்து நிரம்பியவுடன் பாசனத்துக்கு செல்லும் வகையில் இருந்து வந்தது. இக்குளத்தை பல ஆண்டுகளாக தூர்வாராமல் இருந்ததாலும், குளத்துக்கு நீர் வரும் பாதை மற்றும் வெளியேறும் பாதைகள் ஆக்கிரமிப்பால் அடைத்து கொண்டதால் தண்ணீர் வராமல் போனது. இதனால் குளம் இருக்கும் தடமே மறைந்து போனது. இதனால் அக்கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இதையடுத்து குளத்தை தூர்வார வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் மாவட்ட நி்ர்வாகம், குடிமராமத்து பணியின்கீழ் குளத்தை தூர்வாரும் பணி கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது.

இந்நிலையில் ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் குளத்துக்கு வந்தால் மண் மற்றும் மணல் எடுக்க முடியாத என்ற நோக்கத்தில் குடிமராமத்து பணியை செய்தவர்கள் அரைகுறையாக குளத்தை தூர்வாராமல் சென்றுவிட்டனர். மேலும் நாட்டாரிலிருந்து தண்ணீர் வரும் பாதை தூர்வாராமலும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும் சென்றதால் ஆற்றில் தண்ணீர் வந்தும் குளத்துக்கு தண்ணீர் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் 500 ஏக்கர் சாகுபடி நிலை கேள்வி குறியாகியுள்ளது. எனவே தற்போது குளத்தில் 30 சதவீதம் பணிகள் மட்டுமே நடந்துள்ள நிலையில் உடனடியாக விட்டலூர் கிராமத்தில் உள்ள சமுதாய குளத்தை அரைகுறையாக உள்ள தூர்வாரும் பணியை முழுமைப்படுத்தியும், நீர் வரும் பாதை, நீர் வெளியேறும் பாதையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : collector ,community pond ,Vittalur ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...