×

சம்பா, தாளடி விதை நெல்களில் முளைப்புத்திறன் இல்லாததால் தட்டுப்பாடு அபாயம் கேள்வி குறியான சாகுபடி

கும்பகோணம், செப். 10: சம்பா, தாளடி விதை நெல்களில் முளைப்புத்திறன் இல்லாததால் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பா சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் தனியார்களிடமிருந்து கூடுதல் விலைக்கு விதை நெல்களை விவசாயிகள் வாங்கி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணி துவங்கியுள்ளது. மேலும் ஆறுகளில் தண்ணீர் வந்துள்ள நிலையில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சம்பா, தாளடிக்கு 1009, ஆடுதுறை 38, 1009 (1), கோ 50, ஆடுதுறை 46, சொர்ணசப் போன்ற நெல் ரகங்களை சாகுபடி செய்வர். இந்தாண்டு சம்பா சாகுபடிக்கு ஒன்றரை லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சம்பா, தாளடி சாகுபடிக்கான நெல் விதைகளை ஆண்டுதோறும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 16 வட்டார விதை பண்ணை அலுவலகத்தில் இருந்து விவசாயிகள் வாங்கி வந்து நெல்மணிகளை நாற்றாங்காலில் தெளித்து நாற்றுகள் முளைத்தவுடன் பறித்து வயலில் நடுவர். இதற்காக விவசாயிகள், தஞ்சை மாவட்டத்தில் உள்ள விதைப்பண்ணைகளில் நெல் விதைகளை வாங்க சென்றபோது இருப்பு வைக்கப்பட்டுள்ள விதைகள் அனைத்திலும் முளைப்புத்திறன் இல்லாததால் விற்பனை செய்ய முடியாது. இதனால் சம்பா, தாளடிக்கு நெல் விதைகள், விதைப்பண்ணையில் தட்டுப்பாடாக உள்ளது. இதனால் இந்தாண்டு சம்பா, தாளடி விவசாயிகளுக்கு தண்ணீர் வந்தும் நெல் விதைகள் கிடைக்காமல் போனதால் வேதனையில் உள்ளனர்.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட கிராமப்புற நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் விமலநாதன் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் விதை நெல் மணிகளை விதைப்பண்ணை வழங்குவதற்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இவர்கள் நாற்றுகளை நடவு செய்தவுடன் வேளாண்மைத்துறை அலுவலர்கள் கண்காணித்து வந்தும், குறைகளை கூறி நிவர்த்தி செய்து அறுவடை செய்த அந்த நெல் மணிகளை ரூ.22க்கு வாங்குவர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள விதைப்பண்ணையிலிருந்து ஆய்வுக்கு சென்ற நெல் விதைகளில் முளைப்புதிறன் இல்லாததால், அனைத்து நெல் விதைகளும் விவசாயிகளிடம் விற்பனை செய்ய முடியாமல் போய் விட்டது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் நெல் விதைகள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் தஞ்சை மாவட்டத்திலுள்ள 16 வட்டாரத்திலுள்ள விதைப்பண்ணையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 1,200 டன் விதை நெல்கள் விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் அடைந்தது. இதுபோன்ற நிலையால் வேளாண்மைத்துறையினருக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வேளாண்மை விதைப்பண்ணையில் நெல் விதைகளை வாங்கினால் 50 சதவீதம் மானியமும், விவசாய உபகரணங்கள் வழங்கப்படுவதால் விவசாயிகள் ஆர்வத்துடன் விவசாயிகள் விதைப்பண்ணையில் விதைகளை வாங்குவர். ஆனால் விதைகள் அனைத்திலும் முளைப்புத்திறன் இல்லாததால் விவசாய உபகரணங்கள் வாங்க முடியாமலும், தனியாரிடம் அதிக விலைக்கு நெல் விதைகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நெல் விதைகள் தட்டுப்பாட்டால் தனியார் விலை நிர்ணயிக்கும் அபாயம் ஏற்படவாய்ப்புள்ளது. இதனால் தனியார் நெல் விதை விற்பனை செய்பவர்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

விதைப்பண்ணையில் 50 கிலோ நெல் விதை மூட்டை ரூ.830 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தனியாரிடம் 30 கிலோ மூட்டை ரூ.1,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. வேளாண்மைத்துறையில் அடுத்தாண்டு சாகுபடிக்கு தேவையான நெல் விதைகளை பாதுகாப்பாக வைக்காமல் அலட்சியப்படுத்தி வந்ததால் நெல்மணிகளில் முளைப்புத்திறன் இல்லாமல் போய்விட்டது. சில ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால் சம்பா, தாளடி சாகுபடி பொய்த்துபோன நிலையில் இந்தாண்டு தண்ணீர் வந்தும் வேளாண்மைத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் சம்பா, தாளடி சாகுபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அனைத்து விதை பண்ணைகளில் உள்ள விதை நெல்மணிகள் முளைப்புத்திறன் இல்லாமல் போனதற்கு காரணத்தை கண்டுபிடிக்க உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றார். காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட துணை செயலாளர் சுகுமார் கூறுகையில், திருப்பந்துருத்தியில் உள்ள வேளாண்மைத்துறை விதை பண்ணையிலிருந்து 250 கிலோ விதை நெல்களை வாங்கி வந்து நாற்றாங்காலுக்காக தெளித்தபோது 5 நாட்களுக்கு மேலாகியும் முளைக்கவில்லை. இதனால் விதைப்பண்ணை நெல் விதைகள் தரமற்றதாக போய்விட்டது என்பதை உணர்ந்து மற்ற விவசாயிகளிடமிருந்து நாற்றுகளை வாங்கி நடவு செய்துள்ளேன். விதை நெல்கள் முளைப்புத்திறன் இல்லை என்பது தெரிந்தும் விற்பனை செய்த விதைப்பண்ணை அதிகாரிகள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.

Tags :
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில்...