×

வருங்காலங்களில் குடிநீர் பிரச்னை வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பேன்

பெரம்பலூர், செப். 10: பெரம்பலூர் மக்களவை தொகுதியில் கடந்த மே நடந்த தேர்தலில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பகுதி கிராமமான பாடாலூரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசியதாவது: என்னை பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற்று 100 நாட்களாகிவிட்டது. இந்த 100 நாட்களில் நான் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியான ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 50 பேர் வீதம் 6 சட்டப்பேரவை தொகுதிக்கும் மொத்தம் 300 பேருக்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் இலவசமாக மேல்படிப்பு படிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கடந்த கோடையில் நிலவிய தண்ணீர் பிரச்னையை தீர்க்க சொந்த செலவில் லாரிகள் மூலம் தண்ணீர் விட நடவடிக்கை எடுத்தேன். அதேபோல் தற்போது தொகுதியில் உள்ள 100 பள்ளிகளுக்கு தலா ஒரு கம்ப்யூட்டர் வீதம் வழங்கவுள்ளேன். அரியலூர்- பெரம்பலூர்- துறையூர்- நாமக்கல் வழித்தடத்தில் புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்க பாராளுமன்றத்தில் பேசியுள்ளேன்.

அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களையும் சந்தித்து பேசி நடவடிக்கை எடுக்கக்கோரி உள்ளேன். அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய மத்திய நிதி அமைச்சரிடம் பேசியுள்ளேன். இந்த திட்டத்தை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன். அதேபோல் வருங்காலங்களில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண பாராளுமன்றத்தில் பேசி உரிய நடவடிக்கை எடுப்பேன். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை டோல்கேட்டில் உள்ள எங்களது அலுவலகத்தில் மனுக்கள் மூலம் கொடுத்து பயன்பெறலாம் என்றார். இதைதொடர்ந்து திருவளக்குறிச்சி, இரூர், ஆலத்தூர்கேட், கூத்தனூர், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், மாவிலங்கை, தேனூர், கண்ணப்பாடி, டி.களத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மாவட்ட திமுக செயலாளர் குன்னம் ராஜேந்திரன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மதியழகன் உடனிருந்தனர்.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது