×

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகளை கவர விளக்கக்கூடம் கட்டும் பணி தீவிரம்

கம்பம்: தேனி மாவட்டத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்குவது சுருளி அருவி. கம்பத்திலிருந்து சுருளிப்பட்டி வழியாக 8 கிமீ தொலைவில் சுருளி அருவி உள்ளது. இது சுற்றுலா தலமாக மட்டுமல்லாது, சிறந்த ஆன்மீக பூமியாகவும் விளங்கிறது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது முதல் இங்குள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், பூத நாராயணன் கோயில், கைலாச நாதர் கோயில் மற்றும் இஸ்லாமியர்களுக்கு சுருளி மஸ்தான் தர்காவும் உள்ளதால், சுருளி அருவி எப்பொழுதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.தமிழகம் மட்டுமின்றி கேரளா சுற்றுலாப் பயணிகளையும் அதிகம் வருவர்.சுருளி அருவிக்கு நுழைவு கட்டணமாக ரூ. 30 வனத்துறை சார்பில் வசூலிப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சுருளி அருவிக்கு மேகமலை பகுதியிலிருந்து தூவானம் அணையிலிருந்தும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதியிலிருந்தும் நீர்வரத்து வருகிறது. வருடத்தில் ஏறக்குறைய 9 மாதங்கள் வரை நீர் வரத்து காணப்படும். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக நீண்ட நாட்களாக சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. கடந்த இரு மாதங்களுக்கு முன் சுருளி அருவியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதித்தது. அதனடிப்படையில் சுருளி அருவியில் விளக்கக்கூடம், வனத்துறையினர் சார்பாக கட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, சுருளி அருவி பற்றிய அரிய தகவல்கள் மற்றும் அற்புதங்களை அறியும் வகையில் இந்த விளக்கக்கூடம் இருக்கும். சுற்றுச்சூழல் குறித்த விவரங்கள் மற்றும் சுருளி அருவி குறித்த வரலாறு, புகழ் தொடர்பான ஓவியங்கள் பார்வைக்காக வைக்கப்படும். இதனால், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும், என்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு தொடர்வதால், சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு செல்ல அனுமதி இல்லை. ஆனாலும், இன்னும் ஓரிரு நாட்களில் சுருளி அருவிக்கு வர உள்ள தடை நீக்கப்படும் என்றும், அதே நேரம் அருவியில் குளிக்க தடை நீடிக்கும் எனவும் தெரிகிறது….

The post சுருளி அருவியில் சுற்றுலா பயணிகளை கவர விளக்கக்கூடம் கட்டும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Troll Fall ,Theni district ,
× RELATED அழகும், மருத்துவமும் நிறைந்த கோழிக்கொண்டை