×

புதிய கல்வி கொள்கையை எதிர்த்து காரைக்காலில் 2 நாள் பிரசாரம் அனைத்து கட்சி கூட்டத்தில் அறிவிப்பு

காரைக்கால், செப்.10: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து, காரைக்காலில் 2 நாள் பிரசாரம் செய்யப்படும் என, அனைத்து கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ், திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, திராவிட கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்ட முடிவில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலர் தமீம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசு கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கை என்பது மாணவர்கள் கல்வி மேம்பாடு என்ற நோக்கில் உருவாக்குவதாக கூறுவது ஏற்புடையதாக இல்லை. மத்தியில் ஆளும் பாஜக அரசு, தமது கொள்கைகளை கல்வியில் புகுத்தும் வகையிலும், மாணவர்கள் சிந்தனையை பிற்போக்குத்தனமான நிலைக்கு கொண்டு செல்லும் வகையிலுமே அதன் சரத்துகள் அமைந்திருக்கின்றன. இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பல்வேறு கட்சியினரும் விரிவான கருத்துகளை முன்வைத்து பேசி வருக்கின்றனர். இதனை நாட்டில் அமல்படுத்தக் கூடாது. இந்த புதிய கல்விக் கொள்கையின் சாராம்சங்களை மக்களுக்கு விளக்கும் வகையில் வரும் 13 மற்றும் 14ம் தேதியில் காரைக்கால் மாவட்டம் முழுவதும் தெருமுனை பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Tags : party meeting ,campaign ,Karaikal ,
× RELATED காரைக்காலை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி