×

காரைக்காலில் அத்தியாவசிய பொருட்களை ரேஷனில் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

காரைக்கால், செப்.10:அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் ரேஷன் கடைகள் மூலம் வழங்க வலியுறுத்தி, காரைக்காலில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், காரைக்கால் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார். காரைக்கால் மாவட்ட துணை தலைவர் திவ்யநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் தமீம், மாநில செயற்குழு உறுப்பினர் வின்சென்ட் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, விவசாய தொழிலாளர் சங்க நாகை மாவட்ட செயலாளர் ஸ்டாலின் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், விவசாய தொழிலாளர் சங்கத்தின் நாகை மாவட்ட செயலாளர் ஸ்டாலின் பேசியது:

மாதம் தோறும் இலவச அரிசியை புதுச்சேரி அரசு தடையின்றி வழங்க வேண்டும். மஞ்சள்நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் இலவச அரிசி வழங்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டண உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்வு வருகிறது. எனவே புதுச்சேரி அரசு மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். மேலும், 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். அதன் கூலியை ரூ.225 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் ரேஷன் கடைகள் மூலம் வழங்க வேண்டும். வீடுகள் இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். முதியோர், விதவைகளுக்கு அளிக்கப்படும் மாத உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Tags : Demonstration ,Karaikal ,
× RELATED கால் டாக்சிகள் இயக்குவதற்கு அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்