×

மயிலாடுதுறை பெரியகோயில் குளத்தில் மீன்கள் இறந்து கிடப்பதால் துர்நாற்றம் பக்தர்கள் கடும் அவதி

மயிலாடுதுறை. செப்.10: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மாயூரநாதர் கோயில் கீழமடவிளாகம் பகுதியில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து, கழிவுநீர் மாயூரநாதர் கோயில் திருக்குளத்தில் புகுந்ததால் 4 படிகள் நீர்மட்டம் உயர்ந்தது. இதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவம் அறிந்த நகராட்சி நிர்வாகம் பாதாளசாக்கடை கழிவுநீர் உடைப்பை சரிசெய்தனர். தொடர்ந்து பக்தர்கள் புனித நீராடுவதற்கும், பொதுமக்கள் குளிப்பதற்கும் கோவில் நிர்வாகத்தினர் தடை விதித்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் 2 போர்வெல் மூலம் குளத்திலிருந்து தண்ணீரை இறைத்து வெளியேற்றினர்.

குளத்தில் உள்ள மீன்களை பிடிக்காமல் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் குளத்தில் இருந்த அதிக அளவிலான மீன்கள் சாக்கடை கலந்த சேரில் அமுங்கி இறந்தது. மீன்களை சுற்றி புழுக்கள் வெளியானதால் 2 நாட்களாக கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவிலை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் கோயில் உள்ளே தூர்நாற்றம் வீசுவதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக கோவில் நிர்வாகம் இறந்துபோன மீன்களை அப்புறப்படுத்தி குளத்தை சுத்தப்படுத்தி பக்தர்கள் நீராடுவதற்கு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mayiladuthurai ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...