×

உடன்குடி அருகே அடிப்படை வசதியின்றி அல்லாடும் கலியன்விளை

உடன்குடி, செப். 10: உடன்குடி அருகே உள்ள கலியன்விளை கிராமத்தில் குடிநீர், பஸ் வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமின்றி கிராம மக்கள் அல்லாடி வருகின்றனர்.உடன்குடி யூனியன் வெங்கட்ராமானுஜபுரம் பஞ்சாயத்திற்குட்பட்டது கலியன்விளை. உடன்குடியில் இருந்து சுமார் 5 கிமீ தூரத்தில் உள்ள இக்கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித் வருகின்றனர். இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கென தாமிரபரணி கூட்டுக்குடிநீர் சப்ளை செய்ய சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டது. சிறு மின்விசை திட்டத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மின்மோட்டாரும் பொருத்தப்பட்டது. இந்த மின்மோட்டார் பழுதாகி விட்டது. அடிபம்பும் பழுதாகி காட்சிப்பொருளாக நிற்கிறது. இக்கிராமத்திற்கான குடிநீர் திட்ட பணிகள் முழுமையாக முடங்கி விட்டதால் குடிநீர் மற்றும் அவசர தேவைக்கு ஒரு குடம் குடிநீர் ரூ.10க்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் உழைப்பில் பாதி வருமானத்தை தண்ணீர் தேவைக்கே பயன்படுத்தி அல்லல்பட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த ஊரின் வழியாக உடன்குடிக்கு 3 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. ஏதேனும் அவசர தேவைக்கு உடன்குடிக்கு வந்து விட்டால் இங்கிருந்து வெளியூர்களுக்கு சென்று விடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது பேருந்துகள் ஏதும் இயக்கப்படாததால் எந்தவொரு தேவையானாலும் வாடகை வாகனத்தில்தான் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணம் செய்யும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த ஓராண்டிற்கும் மேல் தெருவிளக்குகள் பழுதாகி கிடக்கிறது. இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதன் காரணமாக இரவு நேரங்களில் இருளில் மூழ்குவதால் பெண்கள் வெளியே நடமாடவே அஞ்சுகின்றனர். பல பகுதிகளில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதன் காரணமாக விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், கலியன்விளை கிராமம் மீது தனி கவனம் செலுத்தி அடிப்படை வசதி பணிகளை விரைந்து நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

Tags : Kalliyanwilai Alladi ,
× RELATED ராமநாதபுரம் முகாமில் தனிமையில்...