×

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா பாசி மாலை விற்பனை ஜோர்

உடன்குடி, செப். 10: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி கடற்கரையில் ஏராளமான பாசிமாலை விற்பனையாளர்கள் குவிந்து வருகின்றனர். பாசிமாலை விற்பனையும் சூடுபிடித்துள்ளது. மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா திருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலாகும். இங்கு வருகிற 29ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கி அக்.8ம் தேதி சூரசம்ஹாரத்துடன் நிறைவடைகிறது. இதையொட்டி தசராவிற்கு வேடமணியும் பக்தர்கள் ஏராளமானோர் விரதம் துவங்கி உள்ளனர். 61 நாட்கள், 41, 21, 11 நாட்கள் என அவரவர் சூழலுக்கு தகுந்தாற்போல் விரதம் மேற்கொள்கின்றனர். விரதமிருக்கும் பக்தர்கள், குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் புனித நீராடி கடற்கரை பகுதியில் விற்பனை செய்யப்படும் பாசி மாலைகளை வாங்கி கடலில் கழுவி அம்மன் பாதத்தில் வைத்து கழுத்தில் அணிந்து கொள்வர்.

தசரா திருவிழாவிற்கு 18 நாட்களே உள்ள நிலையில் தினமும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், செவ்வாடை அணிந்து குவிந்து வருகின்றனர். சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பிருந்து கடற்கரை வரை ஏராளமான பாசி மாலை விற்பனை செய்யும் நரிக்குறவர்களும் குவிந்துள்ளனர். பாசி மாலைகளை அந்த பகுதியிலேயே குடில் அமைத்தும் அல்லது பாசி மாலையை தொங்க விட்டிருக்கும் நிழலிலேயே இருந்தும் கடுமையான விரதம் மேற்கொண்டு தயாரித்து வருகின்றனர். பாசி மாலை விற்பனை செய்ய நெல்லை மாவட்டம் வள்ளியூர், பேட்டை, ராமநாதபுரம், சிவசங்கை மாவட்டத்தில் இருந்து ஏராளமான நரிக்குறவர்கள் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். இதனால் பாசி மாலைகள் விற்பனையும் ஜோராக நடந்து வருகிறது.

Tags : Kulasekaranpattinam Dasara Festival Moss Evening Sale Jour ,
× RELATED புளியங்குளத்தில் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் வாக்களிப்பு