×

குமரியில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் கருத்துகேட்பு கூட்டம் அந்தந்த கிராமங்களில் நடத்த வேண்டும் கலெக்டருக்கு கோரிக்கை

நாகர்கோவில், செப்.10:  குமரி மாவட்டத்தில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டங்களை அந்தந்த கிராமங்களில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.குமரி மாவட்ட விவசாய தொழிலாளர்கள் நல சங்க செயலாளர் ரவி தலைமையில் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனு: குமரி மாவட்டத்தில் 17 கிராமங்களில் வன உயிரின சரணாலயத்திற்கு சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த இருப்பதாக மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த கருத்து கேட்பு கூட்டத்துக்கு கால அவகாசம் போதாது. தனித்தனியாக ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலகம் வாரியாக, 17 கிராம நிர்வாக அலுவலகங்களிலும் கருத்துகேட்பு நடத்தப்பட வேண்டும். மேலும் இந்த வன உயிரின சரணாலயம் பாதிக்கும் பகுதியாக 60 ஊராட்சிகள் வருகின்றன. சுமார் 6 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே அந்தந்த கிராம நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்.

இதேபோல ஆதி திராவிடர் முன்னேற்ற இயக்கம் சார்பில் அதன் தலைவர் ஜாண் விக்டர்தாஸ் அளித்துள்ள மனுவில், ‘கன்னியாகுமரி வனப்பகுதிக்குள் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலமாக 17 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த கிராமங்களில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் வருவதால், பழங்குடியின மக்கள் அனைவரும் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் நிலை ஏற்படலாம்.சம்பந்தப்பட்ட கிராமங்களில் நேரடியாக சென்று மக்களிடம் விபரங்களை எடுத்து கூறி கருத்துகேட்பு கூட்டம் நடத்த வேண்டும். அப்போதுதான் அனைத்து மக்களின் நிலைப்பாட்டை ெதரிந்து கொள்ள முடியும். எனவே கிராம மக்களின் கருத்துக்கள் அடிப்படையிலேயே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Tags : Collector ,Ecological Vibration Zone Convention ,villages ,Kumari ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...