×

பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுதலையில் ஆளுனர் மனிதாபிமான அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் திருவண்ணாமலையில் திருமாவளவன் பேட்டி

திருவண்ணாமலை, செப்.10: பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுனர் துணிந்து, மானிதாபிமான அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என திருவண்ணாமலையில் ெதால் திருமாவளவன் கூறினார்.திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று திருவண்ணாமலை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் ெதால் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:ஜம்மு காஷ்மீர் பிரச்னையில் மோடி அரசு ஜனநாயக படுகொலை செய்துள்ளது. இது குறித்து நாளை (இன்று) சென்னையில் நடைபெற இருந்த போராட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் வருகிற 12ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் ஜனநாயக கட்சிகள் பங்கேற்கின்றன. மேலும், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து அற்புதம்மாளுடன் சேர்ந்து முதலில் அமித்ஷாவிடம் முறையிட்டபோது சிக்கலான பிரச்னை என்னால் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது என்று அவர் கூறினார்.இதையடுத்து, மீண்டும் கடந்த சில நாட்களுக்கு முன் அவரை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து மனுக்களை அளித்தபோது அமித்ஷா வழக்கம்போல புன்னகைத்துவிட்டு சென்று விட்டார். பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுனர் விரைந்து துணிந்து, அவர்கள் மீது கருணை அடிப்படையிலும், மனிதாபிமான அடிப்படையிலும் முடிவெடுக்க வேண்டும்.

பாஜ 2வது முறையாக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்தது என்பது வேதனை மிகுந்த நாட்களாகத்தான் கடந்திருக்கிறது. எடுத்தேன், கவிழ்த்தேன் என தான் தோன்றித்தனமாக முடிவுகளை எடுக்ககூடிய தனது அதிகார பலத்தை பயன்படுத்தி சிறுபான்மை உள்ளிட்ட விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு எதிரான முடிவுகளையும், சட்டங்களையும் கொண்டு வருவதில் பாஜ அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி மாற்றம் செய்யப்பட்டது, பாஜ அரசின் பழிவாங்கும் செயலாகும். குஜராத்தில் அவர் பணிபுரியும்போது மோடி அல்லது அமித்ஷாவுக்கு எதிராக செயல்பட்டார் என்ற காரணத்திற்காக தற்போது அவர் பழிவாங்கப்பட்டிருப்பதாக ெதரிகிறது. தற்போது அவர் திடீரென்று மாற்றம் செய்யப்பட்டிருப்பது திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை. நீதித்துறையிலும் அரசியல் தலையீடு எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பது இது ஒரு சான்று. இது கண்டனத்துக்குரியது.இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Thirumavalavan ,Thiruvannamalai ,
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு