×

ஏலகிரி மலைக்கு சென்ற அரசு பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றதால் பயணிகள் அவதி: மலைக்கு புதிய பேருந்துகள் இயக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை: ஏலகிரி மலைக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற அரசுப் பேருந்தின் என்ஜின் பழுதாகி நடுவழியில் நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்ட ஏலகிரி மலை எந்த காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷன நிலை நிலவி வருவதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. மேலும் இங்குள்ள மலைவாழ் மக்களின் பாரம்பரிய கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் இங்குள்ள பல்வேறு இடங்களை கண்டு ரசிக்க நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் இங்கு 14 கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 2000த்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் பயணம் மேற்கொள்ள திருப்பத்தூரிலிருந்து ஏலகிரி மலைக்கு நிலாவூர், மங்கலம், அத்தனாவூர் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்து உட்பட 4 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அவ்வாறு இயக்கப்படும் அரசு பேருந்துகள் அனைத்தும் தரமான பேருந்தாக இல்லாமல் இருக்கைகள், மேற்கூரைகள், ஏறும் படிகள் ஆகியவை உடைந்தும் இருப்பதால் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்கின்றனர். மேலும் மழைக்காலங்களில் பேருந்தில் அமர்ந்து செல்லும் பயணிகள் பேருந்தின் மேற்கூரையில் இருந்து மழைநீர் வழிவதாக குற்றம் சாட்டுகின்றனர். மலைவாழ் மக்களும் ஓட்டை உடைசல் பேருந்துகளை நிறுத்திவிட்டு புதிய தரமான அரசு பேருந்துகளை ஏலகிரி மலைக்கு விட வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று மாலை திருப்பத்தூரிலிருந்து 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு ஏலகிரி மலை மங்கலம் பகுதிக்கு சென்ற அரசு பேருந்து ஏலகிரி மலை முதல் வகையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென எஞ்சின் பழுது ஏற்பட்டு நடுவழியில் பேருந்து நின்றது. இதனால் பேருந்தில் பயணம் மேற்கொண்ட பயணிகள் ஏலகிரி மலைக்கு செல்ல முடியாமல் காத்துக்கிடந்தனர். மேலும் மலைவாழ் மக்கள் சிலர் மலைச்சாலையில் நடந்தே பயணம் மேற்கொண்டனர். ஒருசிலர் மலைக்கு செல்லும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் உதவி கேட்டு சென்றனர். ஒருசிலர் 7 மணிக்கு நிலாவூர் செல்லும் பேருந்துக்காக காத்திருந்த பயணம் மேற்கொண்டனர். இதனால் பயணிகளும், சுற்றுலா பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். பின்னர் இதுகுறித்து பேருந்தின் டிரைவரும் கண்டக்டரும் திருப்பத்தூர்  பஸ் டிப்போவுக்கு தகவல் தெரிவித்து பின்னர் அங்கிருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு பழுது ஏற்பட்ட பேருந்தை சரி செய்து நேற்றிரவு மீண்டும் திருப்பத்தூர் நோக்கி எடுத்துச் சென்றனர்.புதூர் நாடு போன்று ஏலகிரி மலைக்கும் புதிய பேருந்துகள் விட வேண்டும்திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையான புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லி வாசல் நாடு ஆகிய பகுதிகளுக்கு திருப்பத்தூரிலிருந்து சிறிய அளவிலான தரமான புதிய அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆனால் சுற்றுலாத்தலமான ஏலகிரி மலைக்கு தரமான பேருந்துகள் இயக்கப்படாமல் அடிக்கடி பழுது ஏற்படும் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் மலைவாழ் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஏலகிரி மலைக்கு தரமான புதிய அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும் மலைவாழ் மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post ஏலகிரி மலைக்கு சென்ற அரசு பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றதால் பயணிகள் அவதி: மலைக்கு புதிய பேருந்துகள் இயக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Elagiri ,Jolarbat ,Mount Elagiri ,Tiruppattur ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவு!!