×

ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டத்தால் தமிழக மக்களுக்கு பாதிப்பு இருக்காது: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டத்தால், தமிழக மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.சென்னையை அடுத்த திருவேற்காட்டில் ஆர்.எம்.கே நிறுவனத்தின் சார்பில், சோழா கார்டனில் புதிதாக துவக்கப்பட்டுள்ள கிளப் ஹவுஸ் திறப்பு விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாபா.  பாண்டியராஜன் மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: வீட்டு வசதி வாரியம் மூலம் தனியாருக்கு நிகராக அடுக்குமாடி குடியிடுப்பு வீடுகள் கட்டப்படும், உள்ளாட்சி அமைப்புகளில் இதுவரை வீட்டு வசதி வாரியம் மூலமாக 13 லட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கபட்டுள்ளன. இதில், 6 லட்சம்  வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பத்திர பதிவு கட்டணம் 11 சதவீதம் உள்ளது. அவற்றை குறைக்க ரியல் எஸ்டேட் துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து முதல்வருடன் பேசி முடிவு எடுக்கப்படும். ரயில்வே  துறையில் தமிழில் தேர்வு எழுத தொடர்ந்து அதிமுக அரசு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.திருமழிசையில் கிட்டத்தட்ட 300 ஏக்கர் அளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டு சுமார் 100 ஏக்கர் அளவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளது. பின்னர், மக்களுக்கு மனைகளாக பிரித்து வழங்கப்படும். விநாயகர்  சதுர்த்தி ஊர்வலத்தில் ரவீந்திரநாத் கூறியதில், முன் பகுதியையும், பின் பகுதியையும் விட்டு விட்டு நடுவில் உள்ளதை மட்டும் எடுத்து திரித்துக் கூறியுள்ளனர். முழுவதையும் படித்து பார்த்தால் அது அவர் கூறியது சரி என்று தெரியவரும்.

அண்ணா உடைய மொழி கொள்கைதான் எங்களுடைய மொழிக் கொள்கை. அதிமுக அரசை பொறுத்தவரை அனைத்து நிலைகளிலும் தமிழ் இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு. எந்த சூழ்நிலையிலும், எந்த  காலக்கட்டத்திலும் இதில் நாங்கள் பின்வாங்க மாட்டோம். மத்திய அரசில் சில மாற்றங்கள் இருந்தாலும் எங்கள் நிலையில் உறுதியாக உள்ளோம். அதற்காக போராடவும் செய்வோம். ஏற்கெனவே, ஜெயலலிதாவால் நடத்தப்பட்ட உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் 215 திட்டங்கள் எடுக்கப்பட்டு அதில் 70 சதவீத திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 2வது உலக முதலீட்டாளர் மாநாட்டில் சுமார் 3  லட்சம் கோடி அளவில் திட்டங்கள் தீட்டப்பட்டு அரசின் பரிசீலனையிலும், ஆய்விலும் உள்ளன. அந்த பணிகளும் நடந்து வருகிறது.
நாங்குநேரி, வீரபாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கண்டிப்பாக போட்டியிட்டு வெற்றி பெறும். பத்திரிகையாளர்களுக்கு வீட்டு வசதி வாரியம் மூலம் குறைந்த வாடகையில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மூத்த பத்திரிகையாளர்கள்  சிலருக்கு வீடு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களுக்கும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டத்தால் எந்தவித குழப்பமும் இருக்காது. தமிழக மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார். விழாவில் ஆர்.எம்.கே குழும தலைவர் முனிரத்தினம்,  எம்எல்ஏக்கள் வி.அலெக்சாண்டர், சிறுணியம் பி.பலராமன், கே.எஸ்.விஜயகுமார், முன்னாள் எம்.பி., டாக்டர் பி.வேணுகோபால், முன்னாள் அமைச்சர்கள் மாதவரம் வி.மூர்த்தி, எஸ்அப்துல்  ரஹீம், முன்னாள் எம்எல்ஏ இரா.மணிமாறன், முன்னாள் நகரமன்ற தலைவர் கோலடி டி.மகேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

Tags : Tamil Nadu ,country ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...