×

குளம் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்திய ஆளும்கட்சியினர் அதிமுக எம்எல்ஏவை பொதுமக்கள் முற்றுகை: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

சென்னை: குளம் தூர்வாரும் பணியை ஆளும்கட்சியினர் தடுத்து நிறுத்தியதை கண்டித்து, ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏவை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வஞ்சுவாஞ்சேரி பகுதியில் சுமார் 52 சென்ட் பரப்பில் தர்மகுளம் உள்ளது. சுற்றியுள்ள பகுதிகளான செரப்பணஞ்சேரி, காரணித்தாங்கல், வைப்பூர் ஆகிய கிராம மக்களின்  முக்கிய நீராதாரமாக இந்த குளம் விளங்குகிறது.பொதுமக்களின் குடிநீர் தேவை, விவசாயிகளின் பாசனத்துக்கான ஆதாரமான இந்த குளம் பல ஆண்டாக தூர்வாரப்படாமல் தூர்ந்து கிடந்தது. தற்போது, தமிழக அரசின் குடிமராமத்து பணி திட்டத்தின்கீழ் இந்த குளம் தூர்வாரப்படுகிறது.இந்த குளத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வருவாய்த்துறை அலுவலர்களின் குளறுபடிகளால் அதிமுக பிரமுகர்களான படப்பை ரவிச்சந்திரன், குட்டி ஆகியோர் பட்டா வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தர்மகுளத்தை தூர்வாரும் வண்டல்  மண்ணை தங்களின் பட்டா இடத்தில் கொட்டக் கூடாது என ரவிச்சந்திரன், குட்டி ஆகியோர் தடுத்துள்ளனர்.

இதனால் குடிமராமத்துப் பணி பாதியில் நின்றுள்ளது. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இதுபற்றி கலெக்டரிடம் புகார் அளிக்க நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர்.இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு அதிமுக எம்எல்ஏவான பழனி, காஞ்சிபுரம் கலெக்டர்  அலுவலகம் வந்தார். அப்போது அவரை பார்த்த வஞ்சுவாஞ்சேரி கிராம மக்கள், எம்எல்ஏ வந்த காரை சூழ்ந்து கொண்டு, ‘‘ஓட்டு  கேட்க வந்தபோது பார்த்தோம். மறுபடியும் இப்பதான் பார்க்கிறோம். எங்க ஊர்ல குளத்தை தூர்வாரும் பணியை அதிமுக பிரமுகர்களை தடுக்கறாங்க, எங்களுக்கு குடிநீர் ஆதாரமே அந்த குளம்தான். அதைத் தூர்வர விடாம தடுக்குறாங்க. உங்க  தொகுதிதானே, இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா?,’’ என எம்எல்ஏவை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து காரில் இருந்து கீழே இறங்கிய எம்எல்ஏ பழனி, பொதுமக்களிடம், இதுசம்பந்தமாக கலெக்டரிடம் பேசி தீர்வு காண்பதாக உறுதியளித்தார். ஆனால், அதை ஏற்க மறுத்த பெண்கள், தொடர்ந்து எம்எல்ஏவை சரமாரியாக கேள்வி  கேட்டனர்.

பின்னர், எம்எல்ஏவுடன், பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளிக்கச் சென்றனர். அங்கு கலெக்டர் பொன்னையாவை சந்தித்து, தங்களது மனுவை அளித்தனர். கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகப்பெரிய அளவில்  போராட்டம் நடக்கும் என பொதுமக்கள் எச்சரித்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.எங்களுக்கு குடிநீர் ஆதாரமே அந்த  குளம்தான். அதைத் தூர்வர விடாம அதிமுக பிரமுகர்கள் தடுக்குறாங்க. உங்க  தொகுதிதானே, இதெல்லாம்  உங்களுக்கு தெரியாதா, என எம்எல்ஏவை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி  எழுப்பினர்.

Tags : legislator ,AIADMK ,
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...