மானாமதுரையில் அங்கன்வாடி அருகே கருவேலம் புதரில் நடமாடும் விஷஜந்துகள்

மானாமதுரை, ஆக.22: மானாமதுரையில் அங்கன்வாடி அருகே, கருவேலம் புதரில் விஷஜந்துகள் நடமாடுவதால், குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, அவற்றை அகற்ற பெற்றோர்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.மானாமதுரையில் உள்ள 1வது வார்டில் அண்ணாமலைநகர் உள்ளது. இதன் எதிரே அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு அண்ணாமலை நகர், சாஸ்தாநகர், பட்டத்தரசி, அன்புநகரை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இந்த அங்கன்வாடி அருகே செல்லும் சுப்பன்கால்வாய் கரையில் கருவேலமரங்கள் வளர்ந்து புதர்மண்டிக் கிடக்கிறது. இதற்கு முன் உள்ளாட்சி நிர்வாகம் இருக்கும்போது வார்டு கவுன்சிலர்கள் புகாரின்பேரில் மாதத்தோறும் அப்பகுதியில் சேகரமாகும் குப்பைக்கழிவுகள், கருவேலமரப்புதர்களை அகற்றப்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சுப்பன்கால்வாயின் கரையோரங்களில் வளர்ந்துவரும் கருவேலமரங்களை அகற்றுவதில் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுகிறது. இதனால், அங்கன்வாடி அருகே கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. அப்பகுதியில் விஷப்பூச்கிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும், கரையோரங்களில் வளர்ந்துள்ள கருவேலமரங்களின் புதர்மறைவில் அப்பகுதியில் இருப்போர் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர்.

இதில் கொசு மற்றும் ஈக்கள் உருவாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், விஷஜந்துகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால், குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப பெற்றோர் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் கூறுகையில், ‘அங்கன்வாடியை சுற்றிலும் கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. தற்போது மழைக்காலங்களில் விஷஜந்துகள் அதிகரித்துள்ள நிலையில், கருவேலம்புதர்களில் இருக்கும் பூச்சிகளால் அருகே உள்ள அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். சிறு குழந்தைகளுக்கு என்ன கடித்தது என்று சொல்லத் தெரியாது. மேலும் அப்பகுதியில் இந்த கருவேலமர மறைவில் இயற்கை உபாதைகளை கழிப்பதால் அப்பகுதியில் ஈக்கள் மொய்க்கின்றன. இதனால் குழந்தைகளுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் என பேரூராட்சி நிர்வாகம் கருவேலமரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED நண்பரை கொலை செய்த இருவருக்கு 7ஆண்டு சிறை