×

இடம் தேர்வுக்கு அமைச்சர் வராததால் அதிகாரிகள், பொதுமக்கள் ஏமாற்றம் அரசு மீது நம்பிக்கை இழந்து திரும்பி சென்றனர்

குளித்தலை,ஆக.22: குளித்தலையில் 25 ஆண்டு கனவான நிரந்தர பேருந்து நிலையத்திற்கு இடம் தேர்வு செய்ய அமைச்சர் வராததால் அதிகாரிகள், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அரசு மீது நம்பிக்கை இழந்து திரும்பி சென்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 25 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை நிரந்தரமான பேருந்து நிலையம் என்பது பகல் கனவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு குளித்தலை சுங்க கேட் முசிறி பாலம் பெட்ரோல் பங்க் அருகே திருச்சி கரூர் புறவழிச்சாலையில் பேருந்து நிலையத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. அதற்கு அனைத்து கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் குளித்தலை அருகே உள்ள தோகமலை ஊராட்சி பகுதியாக இருந்தாலும் சிறிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் திருச்சி மாவட்டம் முசிறி பேரூராட்சியில் பேருந்து நிலையம் உள்ளது.சிறுகமணி பேரூராட்சியில் பேருந்து நிலையம் உள்ளது. ஆனால் குளித்தலை மக்கள் 50 ஆண்டு காலமாக எதிர்பார்க்கும் பஸ் நிலையம் மட்டும் ஏன் வரதாமதம் ஆகிறது என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.
கடந்த 50 ஆண்டு காலமாக எத்தனையோ ஆட்சியாளர்கள் வந்து சென்றாலும் இந்த பஸ் நிலையம் பிரச்சினைகள் மட்டும் அக்கறை காட்டாமல் நழுவி விட காரணம் புரியாத புதிராக உள்ளது என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை திடீரென தமிழக போக்குவரத்து அமைச்சர் குளித்தலை பேருந்து நிலையத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்ட சுங்க கேட் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள இடத்தை பார்வையிட வருகிறார் என தகவல் வந்தது.
அதன்பேரில் அனைத்து துறை அதிகாரிகளும், பொதுமக்களும் ஆர்வத்துடன் நீண்ட நேரம் காத்திருந்தனர். அப்போது பொதுமக்கள் இன்றாவது குளித்தலை நகராட்சிக்கு விடிவுகாலம் பிறந்துவிடும் என நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் தகவலின்படி அமைச்சர் வராததால் அந்த நம்பிக்கை ஏமாற்றம் என புலம்பியவாறே சென்றனர்.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா