×

மேய்ச்சலுக்கு இலவச அனுமதி சீட்டு வழங்கக் கோரி மலைமாடுகளுடன் விவசாயிகள் மறியல்

கூடலூர், ஆக.20: மலைமாடுகளுக்கு வனஉரிமை சட்டப்படி மேய்ச்சலுக்கு இலவச அனுமதி சீட்டு வழங்கிட கோரி, கூடலூரில் நுற்றுக்கணக்கான மாடுகளுடன் விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட தொழு அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மலைமாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த மலை மாடுகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே வனத்துறை அனுமதி உள்ளது. இந்த ஆண்டு மாடுகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவும், மலைமாடுகளுக்கான இலவச அனுமதி சீட்டு வழங்கவும் மேகமலை வனஉயிரின சரணாலய அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதுகுறித்து மலைமாடு வளர்ப்போர் சங்கத்தினர் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தீர்வு எட்டாததால், நேற்று திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கூடலூர் பெட்ரோல் பங்க் அருகே விவசாயிகள் நூற்றுக்கணக்கான மாடுகளுடன் மறியலில் ஈடுபட்டனர்.கூடலூர் விவசாய சங்க செயலாளர் ராமர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட தலைவர் ஜெயராஜ் தலைமை தாங்கினர். உத்தமபாளையம் டிஎஸ்பி சின்னக்கண்ணு, கூடலூர் இன்ஸ்பெக்டர்

சுரேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, விரைவாக அனுமதி சீட்டு வழங்க வேண்டும், வனத்துறை மறுக்கும் பட்சத்தில் அடுத்த கட்டமாக மாடுகளுடன் சென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்றுகூறி விவசாயிகள் மறியலை கைவிட்டனர். கர்னல் ஜான் பென்னிகுக் பாரம்பரிய மலைமாடுகள் வளர்ப்போர் சங்க மாவட்ட தலைவர் கென்னடி, செயலாளர் சுரேஷ்குமார், பழனிச்சாமி, செந்தில், ராஜீவ், ரஞ்சித்குமார் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.மலைமாடுகள் வளர்போர் சங்க செயலாளர் சுரேஷ்குமார் கூறுகையில், ஆடி பட்டம் பிறந்தால் பட்டாநிலம், காடுகள் அனைத்தும் விதைத்து விடுவார்கள். அப்போது பட்டாநிலத்தில் மேய்ச்சல் இருக்காது. மாடுகள் வனப்பகுதிக்குள் தான் செல்லவேண்டும். இதுபோல் பங்குனி, சித்திரை, வைகாசியில் கோடை உழவு செய்து விடுவார்கள். அப்போதும் வனப்பகுதிக்குதான் மேய்ச்சலுக்கு செல்ல வேண்டும். கேரளாவில் உள்ள பெரியாறு புலிகள் சரணாலயத்தில் கூட மாடு மேய்ச்சலுக்கு அனுமதி உண்டு. எனவே அரசு உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...