×

சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த தகராறில் இரு தரப்பினர் மோதல் 9 பேர் படுகாயம்: 12 பேர் மீது வழக்கு

இலுப்பூர், ஆக.20: இலுப்பூர் அருகே இறந்தவர் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் வழியில் பட்டாசு வெடித்தது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அரிவாள், கம்பு மற்றும் கட்டையால் தாக்கி கொண்டதில் 9 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இலுப்பூர் அருகே உள்ள தொட்டியபட்டியை பகுதியை சேர்ந்தவர் சின்னையா மகன் பிரேம்குமார் (26). இவரது பாட்டி ரெங்கம்மாள் நேற்றுமுன்தினம் இறந்து விட்டார். இவரது உடலை இடுகாட்டிற்கு அடக்கம் செய்ய பிரேம்குமார் தரப்பினர் உடலை கொண்டு சென்றனர். அப்போது வழியில் வெடியை வெடித்துக்கொண்டு சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த விவசாயிகளான அருகருகே வீடு உள்ள ஆண்டி மகன் ராசு (55) மற்றும் பெருமாள் மகன செந்தில்குமார் (32) ஆகிய இருவரும் வெடியை இந்த பகுதியில் வெடிக்காதீர்கள் குழந்தைகள் பயத்தில் அழுகிறது. மாடுகள் வெறித்து கயறுகளை அறுத்துக்கொண்டு ஓடுகிறது. அருகில் காய்ந்த வேலிகள் மற்றும் வைக்கோல் போர் உள்ளது. தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது என்று கூச்சலிட்டுள்ளனர்.

இதனால் இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டு அரிவாள், கம்பு மற்றும் கட்டையால் தாக்கிக் கொண்டனர். இதில் ஓரு தரப்பை சேர்ந்த சின்னையா மகன் பிரேம்குமார் (26), பிச்சை மகன் முத்தன் (53), ரெங்கசாமி மனைவி ராஜேஸ்வரி (23) ஆகிய மூன்று பேர் காயம் அடைந்தனர். மற்றொரு தரப்பைச் சேர்ந்த ஆண்டி மகன் ராசு (55), பெருமாள் மகன் செந்தில்குமார் (32), முருகன் மனைவி ராசம்மாள் (55), சண்முகம் மனைவி உஷாராணி (30), முத்து மனைவி சின்னம்மாள், ராசு மனைவி சிலம்பாயி ஆகிய 6 பேர் காயம் அடைந்தனர். இதில் நான்கு சக்கர வாகனத்தின் கண்ணாடி அடித்து உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக இது தரப்பினர் கொடுத்த புகாரின்பேரில் சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் இரு தரப்பை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 12 பேர் மீது இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags :
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...