×

திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு இடம் தேடும் பணிகள் தீவிரம்

திருப்பத்தூர், ஆக.20: புதிதாக அமைய உள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கான கலெக்டர் அலுவலகம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பழைய வடாற்காடு மாவட்டத்தில் இருந்து கடந்த 1989ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு வேலூர் மாவட்டம் மீண்டும் 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் திருப்பத்தூர் பகுதி மக்களின் நீண்ட நாள் ேகாரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. தமிழக முதல்வரால் ஆகஸ்ட் 15ம் தேதி அறிவிக்கப்பட்ட மாவட்ட பிரிப்புக்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் முடிந்த பின்னர் மாவட்டங்கள் அமைவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து மாவட்ட பிரிப்பு நடவடிக்கைகள் தொடங்கும். தற்போது வருவாய்த்துறையினரின் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில், புதிய மாவட்டங்களாக உருவெடுக்க உள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர் அலுவலகங்கள், எஸ்பி அலுவலகங்கள் கட்டப்பட வேண்டும். மாவட்டம் உருவாகும் நிலையில், புதிதாக தோற்றுவிக்கப்பட உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கும் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட வேண்டும். இதில் அரசின் விதிப்படி கலெக்டர் அலுவலகம் 100 ஏக்கர் பரப்பளவில் அனைத்துத்துறை அலுவலகங்களும் அடங்கியிருக்கும் வகையில் அமைய வேண்டும்.

திருப்பத்தூர் நகரை பொறுத்தவரை 100 ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான நிலம் இல்லை. கலெக்டர், எஸ்பி அலுவலகங்களுக்கு நிலத்தை கையகப்படுத்த திருப்பத்தூரை ஒட்டியுள்ள ஊரகப்பகுதிகளில் தான் இடத்தை தேர்வு செய்ய வேண்டும். தற்போது நகரில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சப்-கலெக்டர் அலுவலகம், அதனை ஒட்டியுள்ள தாசில்தார் அலுவலகம், கிளை சிறைச்சாலை, சார்நிலை கருவூலம், நகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இவை அனைத்தையும் சேர்த்தால் 50 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. எனவே, நகரின் எல்லைக்குள் அரசு புறம்போக்கு இடமாக 100 ஏக்கர் பரப்பளவில் நிலம் இல்லை. எனவே, மாவட்டத்தின் ஒட்டுமொத்த நிர்வாக அலுலகமான கலெக்டர் அலுவலகமும், எஸ்பி அலுவலகமும் எப்படியாவது நகருக்குள் அமையுமாறு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது நகரை ஒட்டிய 5 கி.மீ தூரத்துக்குள் இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

இதே கருத்தையே வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதற்கேற்ப தாமலேரிமுத்தூர், தருமபுரி ரோடு, கிருஷ்ணகிரி சாலையில் நகரை ஒட்டிய கிராமத்தில் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் அமைய வாய்ப்புள்ளதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில் வேலூரில் இருந்து பிரிய உள்ள மற்றொரு மாவட்டமான ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம், ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம்பகவத் ஆகியோர் ராணிப்பேட்டையில் ஆய்வு செய்தனர்.
குறிப்பாக 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிலைய வளாகம், ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலைய வளாகம் ஆகிய இடங்களை ஆய்வு செய்தனர். அதேநேரத்தில் முகுந்தராயபுரம், லாலாப்பேட்டை, நவ்லாக், வாணாபாடி ஆகிய இடங்களிலும் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் அமைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சப்-கலெக்டர் இளம்பகவத்திடம் கேட்டபோது, ‘ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமையும் இடம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். வரும் 30ம் தேதி வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அப்போது சிறப்பு அலுவலர்கள், கலெக்டர், டிஆர்ஓ உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். அப்போது இதுபற்றியும் ஆலோசிக்கப்படும்’ என்றார்.
இந்நிலையில் வரும் 30ம் தேதி மாவட்ட பிரிப்புக்கான கருத்து கேட்பு கூட்டம் மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடக்கிறது. அந்த இடத்தையும் கலெக்டர் சண்முகசுந்தரம் ஆர்டிஓ இளம்பகவத்துடன் சென்று ஆய்வு செய்தார்.

Tags :
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்