ரயில்வே ஸ்டேசனில் நடைமேடை கட்டும் திட்டம் முடக்கம் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடக்கும் பயணிகள்

காரைக்குடி, ஆக.14:  காரைக்குடி ரயில் நிலையத்தில் பயணிகள் பயன்படுத்த முடியாத அளவில் நீண்ட தூரத்தில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆபத்தான முறையில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காரைக்குடி ரயில்வே ஸ்டேசனுக்கு பல்லவன், ரமேஸ்வரம், சென்னை, செங்கோட்டை, சிலம்பு, கோவை, புவனேஷ்வர், கன்னியாகுமரி என எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் என 20க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.  இங்கிருந்து சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம், மானாமதுரை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு அதிக அளவில் செல்கின்றனர். அதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அதிகஅளவில் வருகின்றனர். ரயில்நிலையத்தில் 5 பிளாட்பார்ம்கள் உள்ளன.

இதில் முதல் பிளாட்பார்மில் ராமேஸ்வரம் சென்னை, செங்கோட்டை சென்னை, கன்னியாகுமாரி பாண்டிச்சேரி பயணிகள் ரயில்கள் வருகின்றன. 2, 3 வது பிளாட்பார்மில் வாரணாசி ராமேஸ்வரம், சேது, கோவை ராமேஸ்வரம், புவனேஸ்வர் ரயில்களும், 2வது பிளாட்பார்மில் மானாமதுரை திருச்சி, மன்னார்குடி, விருதுநகர் திருச்சி ஆகிய பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 4, 5வது பிளாட்பார்மில் காரைக்குடி பட்டுக்கோட்டை இயக்கப்படுகிறது.  முதல் பிளாட்பார்மில் இருந்து மற்ற ரயில்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள நடைமேடை நீண்ட தூரத்தில் உள்ளது. இது பயணிகள் செல்ல ஏதுவாக அமைக்கப்படவில்லை. நடைமேடைக்காக அதிக தூரம் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால் பயணிகள் முதல் பிளாட்பார்மில் இருந்து கீழே இறங்கி ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து 2, 3வது பிளாட்பார்ம்களுக்கு செல்கின்றனர். இதனால் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

பயணிகளின் நலன் கருதி நீண்ட தூரத்தில் உள்ள நடைமேடையை மாற்றி அமைக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளப்படாத நிலையே உள்ளது. ஒவ்வொரு முறை அதிகாரிகள் வரும்போதும் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி செல்வதோடு சரி அதன் பிறகு நடவடிக்கை எடுப்பது இல்லை. புதிய ஸ்டேசன் அருகே இடதுபுறம் பிளாட்பார்ம் அமைக்க ரயில்வே கட்டுமானப்பிரிவு இடம் தேர்வு செய்து ரூ.2 கோடியே 3 லட்சம் ஒதுக்கியுள்ளதாக கூறுவதோடு சரி இதுவரை பணிகள் துவங்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.

Tags :
× RELATED காரைக்குடியில் பட்டா கத்தியுடன் ரவுடிகள் ரகளை