×

தேன்கனிக்கோட்டை அருகே தக்காளி, சாமந்தி தோட்டங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்

தேன்கனிக்கோட்டை, ஆக. 14:  தேன்கனிக்கோட்டை அருகே தக்காளி, சாமந்தி தோட்டங்களுக்குள் புகுந்த 5 யானைகள் பயிர்களை நாசம் செய்தது. இங்கு முகாமிட்டுள்ள யானைகளை, கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதியில் போதிய மழை பெய்யாததால், கடும் வறட்சி நிலவி வருகிறது. காடுகளில் தண்ணீர் இல்லாததால், யானைகள் கிராமங்களை நோக்கி படையெடுத்து வருகின்றன. இந்நிலையில், தேன்கனிக்கோட்டை அருகே திம்மசந்திரம் வனத்தில் 10 யானைகளும், பேளாளம் வனப்பகுதியில் 5 யானைகளும் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவது வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பேளாளம் வனப்பகுதியில் இருந்து வந்த 5 யானைகள் இருதுக்கோட்டை கிராமத்தில் விவசாயி அண்ணாதுரையின் தோட்டத்தில் புகுந்து 2 ஏக்கரில் பயிரிட்டிருந்த சாமந்தி மற்றும் தக்காளியை சாப்பிட்டும், காலால் மிதித்து நாசம் செய்துள்ளது. நேற்று காலை அண்ணாதுரை தோட்டத்திற்கு சென்றபோது யானைகளால் பயிர் சேதம் அடைந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் சேதங்களை பார்வையிட்டு உரிய நஷ்டஈடு பெற்று தருவதாக உறுதியளித்தனர். உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களை நோக்கி படையெடுக்கும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகளுக்கு எம்எல்ஏ   ஆறுதல் : கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெலத்தூர் ஊராட்சி சிங்கசாதனப்பள்ளி கிராமத்தில் காட்டு யானைகளால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ பார்வையிட்டார். தொடர்ந்து, விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். வனத்துறை அதிகாரிகளிடம் பேசி யானைகளை காட்டிற்கு விரட்ட உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அப்போது ஓசூர் நகர செயலாளர் சத்யா ஏம்எல்ஏ, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், ஒன்றிய செயலாளர் சின்னபில்லப்பா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட திமுகவினர் ஊடனிருந்தனர்.

விரட்டிய வேகத்தில் திரும்பிய யானைகள்
ஓசூர் அருகே பாகலூர் பகுதியில், கடந்த 2 நாட்களாக 2 யானைகள் முகாமிட்டு இருந்தன. இந்த யானைகள் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள சிங்கசாதனபள்ளி, கக்கலூர், கொடியாளம், தேவீரப்பள்ளி, பாகலூர், பெலத்தூர் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த விவசாய பயிர்களை சேதப்படுத்தின. இதையடுத்து, 30க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் அப்பகுதியில் முகாமிட்டு யானைகளின் அட்டகாசத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிங்கசாதனபள்ளி பகுதியில் முகாமிட்டிருந்த யானைகளை, பட்டாசு வெடித்தும் தாரை தப்பட்டை முழங்கியும், கர்நாடக மாநில வனப்பகுதிக்கு  விரட்டியடித்தனர். ஆனால், விரட்டிய வேகத்திலேயே நேற்று அதிகாலை மீண்டும் தமிழக பகுதி சிங்கசாதன பள்ளிக்கே யானைகள் திரும்பி வந்தன. இதனால், வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Tags :
× RELATED கிருஷ்ணகிரியில் தீப்பற்றி எரிந்த கார்