×

ஒகேனக்கல்லில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு

பென்னாகரம், ஆக.14: கர்நாடக மாநிலத்தில் பெய்த கன மழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக அணைக்கு வரும் உபரி நீர், தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. அதிக அளவில் காவிரி ஆற்றில் தண்ணீர் வந்ததால், ஒகேனக்கல், சத்திரம், நாடார் கொட்டாய், நாகர்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் கரையோரங்களில் கட்டப்பட்டிருந்த வீடுகளில் தண்ணீர் புகுந்தது.இதனால் அங்கு வசித்த மக்கள் பாதுகாப்பு கருதி வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒகேனக்கல் வெள்ளம் பாதித்த பகுதிகளை பென்னாகரம் திமுக எம்எல்ஏ இன்பசேகரன் ஆய்வு செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில், உபரி நீரை ராட்சத குழாய்கள் அமைத்து பென்னாகரம் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு வழங்க வேண்டும் என, சட்டமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தேன். ஆனால் தமிழக அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. காவிரியின் நுழைவிடமாக தர்மபுரி உள்ளது. ஆனால் தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு காவிரி நீரின் பயன் ஏதும் இல்லை. எனவே தமிழக அரசு தர்மபுரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், இவ்வழியாக செல்லும் உபரி நீரை ஏரிகளில் நிரப்ப வேண்டும் என்பது, இங்குள்ள மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது என்றார்.  இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் வானவில் சண்முகம், ஒன்றிய பொருளாளர் முருகேசன், நகர நிர்வாகி தாரணி கமலேசன், மோகன், முத்தையன், விநாயகம், காளி, பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா